"கட்டை விரலின் கதை" கேட்க வாரீகளா? (2)
குரு நமஸ்காரம் செய்துவிட்டு, எழுந்து நின்றனர் அரச வாரிசுகள் அய்வரும்.
"நான் சொல்வதைக் கவனமாய் கேளுங்கள். நாளை இந்த நாட்டை ஆளப் போகிற அரச பரம்பரை நீங்கள். வாள் வித்தை, வில் வித்தை, குதிரையேற்றம் போன்ற பல கலைகளிலும் நீங்கள் திறன் பெற வேண்டும். முதலில், வில் வித்தை கற்றிட உங்கள் கவனத்தைச் சற்றும் சிதற விடாமல் ஒருமுகப்படுத்திட வேண்டும்...!'' என்றார் துரோணாச்சாரியார்.
“அப்படியே ஆகட்டும்... குருவே..!”
அய்வரும் மன உறுதியுடன் நிமிர்ந்து நின்றனர்.
ஏகலைவனைக் கட்டித் தழுவிக் கொண்டார் தந்தை.
“மகனே..! இந்த இளைய வயதிலேயே வேட்டையாடுவதில் இவ்வளவு ஆர்வத்தோடு இருக்கிறாயே..! ரொம்ப மகிழ்ச்சி. முறைப்படி நீ வில் வித்தைப் பயிற்சி பெற வேண்டும். அதற்காக நாளை உன்னை ஒரு குருவிடம் அழைத்துச் செல்லப் போகிறேன்..!" என்று பூரிப்பில் தந்தை சொல்ல,
"உங்களைவிட எனக்கு வேறு யாரப்பா குரு..? வேட்டுவ குலத்தில் பிறந்து, வேட்டையாடுவதை முதன்மைத் தொழிலாகக் கொண்ட உங்களைவிட எனக்கு வேறு யார் சிறப்பாய் வில் வித்தையைக் கற்றுத் தந்துவிட முடியும்..?” என்று கேட்டான் ஏகலைவன்.
"அப்படியில்லை.... மகனே! துரோணாச் சாரியார் என்றொரு குரு இருக்கிறார். மிகச் சிறந்த பயிற்சியாளர். அவரிடம் சென்று நீ கற்றுக் கொண் டால், இன்னும் சிறப்பாக இருக்குமல்லவா..!” ஆயிரமாயிரம் கனவுகளோடு தந்தை சொன்னார்.
"வேண்டாமப்பா... அரச பரம்பரையினருக்கு பயிற்சி தரும் குலகுரு அவர். வேட்டுவ குலத்தில் பிறந்த எனக்குப் பயிற்சியளிக்க அவர் சம்மதிப் பாரா..?'' என்று ஏகலைவன் கேட்க,
"அந்தக் கவலை உனக்கு வேண்டாம்... மகனே! உன்னைப் போலொரு சிறந்த மாணவ னுக்குப் பயிற்சி தர துரோணாச்சாரியார் நிச்சயம் மறுக்க மாட்டார் என்றே நம்புகிறேன்...'' என்று தந்தை உறுதியாய்ச் சொன்னதும், அரை மனதோடு 'சரி'யென்று சம்மதித்தான் ஏகலைவன்.
'அய்வரும் தயாரா..?” என்று கேட்டார் துரோணாச்சாரியார்.
“தயார்... குருவே..!” என்றனர். அய்வரின் கைகளிலும் வில் இருந்தது. அந்த வில்லில் பொருத்தப்பட்ட அம்புகள் எதிரேயிருந்த மாமரத்தைக் குறி பார்த்துக் கொண்டிருந்தன.
“ம்ம்... தயார். அம்பைச் செலுத்துங்கள்..!” என்று துரோணாச்சாரியார் ஆணை பிறப்பித் ததும், ‘சர்'ரென்று அய்ந்து அம்புகளும் சீறிப் பாய்ந்தன.
ஒவ்வொரு அம்பும் மாமரத்தில் இருந்த நான்கைந்து மாங்காய் கொத்துகளை ஒரே பாய்ச்சலில் குத்திச் சாய்த்தன.
''அபாரம்....! அபாரம்..!!” கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்தார் துரோணாச்சாரியார்.
"குருவே வணக்கம்..!”
துரோணாச்சாரியாரின் காலடியில், நெடுஞ்சாண்கிடையாக அப்படியே விழுந்து வணங் கினார் ஏகலைவனின் தந்தை. எழுந்ததும் கையிலிருந்த துண்டை அப்படியே தன் கக்கத்தில் இடுக்கிக் கொண்டார். தந்தையை ஒட்டியவாறு நின்றிருந்தான் ஏகலைவன்.
“யாரடா... நீங்கள்..?”
அதிகார தோரணையோடு கேட்டார் துரோணாச்சாரியார்.
“குருவே... நான் வேட்டுவ குலத்தைச் சேர்ந்தவன். இவன் எனது மகன் ஏகலைவன். இந்த சிறுவயதிலேயே வேட்டையாடுதலில் மிகுந்த ஆர்வத்தோடு இருக்கின்றான். இவனது அபார திறமை கண்டு நானே வியந்து போனேன். இவனுக்கு தாங்கள் முறையான வில் வித்தைப் பயிற்சியைக் கற்றுத் தர வேண்டும்...!" என்று பணிந்து வேண்டி நின்றார் ஏகலைவனின் தந்தை.
காடே அதிரும்படி சிரித்தார் துரோணாச் சாரியார்.
"அரச வம்சத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பயிற்சி தருகிற குலகுரு நான். கேவலம், வேட்டுவ குலத்தைச் சேர்ந்த ஒருவனுக்குப் பயிற்சி தருவதா..? என்னிடமே வந்து கேட்கிற அளவிற்கு உனக்கு இவ்வளவு துணிச்சல் எப்படியடா வந்தது...? இனி ஒரு நொடியும் என் முன்னே நிற் காதே - உயிர் பிழைத்து ஓடிப்போய் விடு..!" சிங்கம் போல் துரோணாச்சாரியார் கோபமாய் கர்ஜித்தார்.
ஏகலைவனின் தந்தையினது உடல் நடுங் கியது. தலைக்கு மேல் கைகளைக் குவித்து கும் பிட்டபடி, பயந்துபோய் அப்படியே பின்வாங்கி வேகமாக நடந்தார்.
'அப்பவே சொன்னேனே... கேட்டீர்களா..!' என்பதுபோல், தந்தையின் நிலைகண்டு வருந்திய படி, அவர் பின்னாலேயே ஓடினான் ஏகலைவன்.
'எப்படியேனும் சிறந்த வில் வித்தைக்காரனாக வர வேண்டும்...!' என்கிற ஏகலைவனின் எண்ணம், முன்னிலும் தீவிரமாக அவனுக்குள் வலுப்பெற்றது.
“தந்தையே... நீங்கள் ஆசைப்பட்டதைப்போல், எனது வில் வித்தை குருவாக துரோணாச்சாரியார் இருந்தாலும், நீங்கள்தான் எனக்கு உண்மையான குரு..!” என்ற ஏகலைவன், தந்தையின் காலில் விழுந்து வணங்கினான்.
“நேராக நிமிர்ந்து நில்; நெஞ்சுக்கு நேராக வில்லை நிமிர்த்திப் பிடி. அம்பின் முன்பக்கத்தை இடக்கையின் கட்டைவிரலாலும், ஆட்காட்டி விரலாலும் அழுத்திப் பிடி. அம்பின் பின் பக்கத்தை வலதுகை கட்டைவிரலாலும், ஆட் காட்டி விரலாலும் பிடி. இப்போது உன் பார்வை, உன் இலக்கு எதுவோ அதை மட்டுமே குறி பார்க்க வேண்டும். ம்ம்..... விடு அம்பை ..!''
குருவின் கட்டளைக்கு கட்டுப்பட்ட சீடனாய், தந்தையின் சொல்லைக் கேட்டு, அம்பை செலுத்தினான் ஏகலைவன்.
சரியாக இலக்கின் மய்யத்தைக் குறி பார்த்துத் தாக்கியது ஏகலைவன் எய்த அம்பு.
துரோணாச்சாரியார் கேட்டார்.
“அர்ஜூனா... அதோ தூரத்தில் மரம் தெரிகிறதா..?'
“இல்லை ... குருவே..!” அர்ஜூனன்.
“மரத்தில் இருக்கிற கிளை தெரிகிறதா..?” மறுபடியும் துரோணாச்சாரியார் கேட்டார்.
அர்ஜூனன் சொன்னான்; “இல்லை... குருவே..!”
விடாது மீண்டும் கேட்டார் துரோணாச் சாரியார்.
“அந்தக் கிளையில் ஒரு புறா இருக்கிறதே. அதாவது தெரிகிறதா..?"
''இல்லை .... குருவே...'' என்றான் அர்ஜூனன்.
“இப்போது விடு... அம்பை!” என்று துரோணாச் சாரியார் சொல்ல,
“புறாவின் கண் மட்டும் தெரிகிறது...” என்று அர்ஜூனன் சொல்லவும், அம்பு புறாவின் கண்ணில் பாய்ந்து நின்றதும் மிகச் சரியாய் இருந்தது.
"ஆகா.... அற்புதம்.... அர்ஜூனா! இனி உன்னை வில் வித்தையில் வெல்ல உலகில் எவனுமில்லை . என் பயிற்சி அல்லவா, சிறப்பாக தேறிவிட்டாய்..!''
துரோணாச்சாரியாரின் பாராட்டில் பூரித்துப் போனான் அர்ஜூனன்.
தந்தையின் பயிற்சியில் வில் வித்தையைக் கற்றுத் தேறினான் ஏகலைவன்.
எந்நேரமும் வில் வித்தை பற்றிய சிந்தனையிலேயே இருந்தான். நிற்பது, நடப்பது, உண்பது, உறங்குவது என எக்கணமும் அவனது கவனம் வில் வித்தைப் பயிற்சியிலேயே இருந்தது.
ஆர்வத்தோடும் மிகுந்த ஈடுபாட்டோடும் வைராக்கியத்துடனும் இருந்த ஏகலைவன் வெகு சீக்கிரத்திலேயே சிறந்த வில் வித்தை வீரனாக தேறினான்.
காலச் சக்கரம் உருண்டோடியது.
(வளரும்)
No comments:
Post a Comment