காஞ்சிபுரம், செங்கற்பட்டில் தமிழர் தலைவர் மக்களை தயாராகும்படி அழைப்பு!
செங்கற்பட்டுக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா பயனாடை அணிவித்து, புத்தகங்களை வழங்கி வரவேற்றார். செங்கற்பட்டில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு - புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமைகள் பறிப்பு எதிர்ப்புப் பரப்புரை பயணப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார் (செங்கற்பட்டு, 12.4.2022).காஞ்சிபுரம், ஏப்.13- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடந்த 3.4.2022 அன்று நாகர்கோயிலில் தொடங்கிய நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்புப் பரப்புரை பெரும் பயணம் தென்மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு நேற்று (12.4.2022) காஞ்சிபுரம், செங்கற்பட்டில் பரப்புரை மேற்கொண்டார்.
தமிழர் தலைவர் மேற்கொண்டுள்ள இப்பயணத்துக்கு அனைத்துக்கட்சினர், பொதுமக்களிடையே பெரும் ஆதர வும், வரவேற்பும் பெருகியுள்ளது. சுவரெழுத்துகள், தெரு முனைக்கூட்டங்கள் வாயிலாக தமிழர் தலைவர் சிறப்புரை ஆற்றும் பரப்புரைப்பயணம் குறித்தும் தொடர்ச்சியாக மக்க ளிடையே பரப்புரையை கழகப்பொறுப்பாளர்கள் மேற் கொண்டனர். பரப்புரைப் பெரும்பயணம் சென்னையில் 25.4.2022 அன்று நிறைவு பெறுகிறது.
காஞ்சிபுரம்
நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்புப் பரப்புரை பெரும் பயணக் கூட்டம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் முன்பு மாவட்ட தலைவர் டி.ஏ.ஜி.அசோகன் தலைமையில் நடைபெற்றது. மண்டல தலைவர் எல்லப்பன், மண்டல செயலாளர் கதிரவன், மாவட்ட செயலாளர் இரவீந்திரன், நகர செயலாளர் வேலாயுதம், நகர தலைவர் இளையவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மகளிர் பாசறை செயலாளர் சே.மெ. மதிவதனி, கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகி யோர் உரையாற்றிய பின் நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர், மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் பேசி முடித்ததும், இறுதியில் தமிழர் தலைவர் பேசினார்.
தமிழர் தலைவர் உரை
அவர் தமதுரையில் முன்னால் பேசியவர்கள் மூன்று முக்கிய பிரச்சினைகளுக்காக போர் முரசு கட்டப்பட்டிருக்கிறது என்று பேசியதை நினைவூட்டி, ”இப்போதல்ல, 1925 லேயே இந்த மண்ணில் போர் முரசு கொட்டப்பட்டுவிட்டது. அதுவும் நான் உட்பட இங்கிருக்கும் யாரும் பிறக்காத காலத்திலே” என்று பலத்த கைதட்டல்களுடன் தொடங்கினார். தொடர்ந்து, ”திராவிடர் இயக்கத்தினர் மட்டும் இந்தபோரிலே ஈடுபட வில்லை. ஒரு பார்ப்பனரும் தீவிரமாக ஈடுபட்டார்.” என்று பலரும் அறியாத காஞ்சிபுரம் தொடர்பான ஒரு விசயத்தைச் சொல்ல தொடங்கினார். அவருடைய பெயர் பரவஸ்து ராஜ கோபாலாச்சாரியார்! சி. ராஜகோபாலாச்சாரியார் முதல மைச்சர். இந்த மண்ணிலே ஒரு ராஜகோபாலாச்சாரியாரை எதிர்த்து, இன்னொரு ராஜகோபாலாச்சாரியாரையே போராட வைத்த பெருமை இந்த இயக்கத்திற்கு உண்டு” என்று சொல்லி, எப்படிப்பட்ட இயக்கம் இந்த இயக்கம் என்று அனைவரையும் வியக்க வைத்தார்.
தொடர்ந்து, மேடையில் காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயர்; பெண் மேயர் மகாலட்சுமி அமர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, 97 ஆண்டுகளுக்கு முன்னால், இதோ பக்கத்தில் இருக்கும் செங்கற்பட்டில் 1929 இல் நடைபெற்ற சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாட்டில் போடப்பட்ட தீர்மானங் களின் வெற்றிக்கனிகள் இவர்கள்” என்று மிகுந்த பெரு மிதத்துடன் குறிப்பிட்டு, இந்த இயக்கத்தின் நெடிய வர லாற்றையும், உன்னதமான கோட்பாடுகளையும் சொல்லாமல் சொன்னார். மக்களும் அதை உள்வாங்கிக் கொண்டனர். “அப்படிப்பட்ட சூழலிலே மீண்டும் குலக்கல்வித் திட்டமா?Ó என்று பிரச்சாரத்தின் மய்யப்பொருளுக்கு வந்தார். ஆனால் தவிர்க்க இயலாமல் மீண்டும் காஞ்சிபுரத்தின் நினைவு களுக்குள் சென்று, “எப்படி அண்ணாமலை பல்கலைக்கழகம் திராவிட இயக்கத்தின் பண்ணையோ, அப்படித்தான் பச்சையப்பன் கல்லூரியும். அந்த பச்சையப்பன் கல்லூரியில்தான் அண்ணா அவர்களே படித்தார் என்று பச்சையப்பன் கல்லூரிக்கு முக்கியத்துவத்தை முன்னுரையாக வழங்கிவிட்டு, “அப்படிப்பட்ட பச்சையப்பன் கல்லூரியிலேயே 1928க்கு முன்பு வரை, தாழ்த்தப்பட்ட, மலைவாழ், சிறுபான்மை மக்கள் ஆகியோருக்கு இடம் கிடையாது. 1928 இல் சென்னையில் பெரியார் மாநாடு கூட்டி, இந்த நிலையைக் கேள்விக்குட் படுத்தியதையும், அதன் பிறகே நீதிக்கட்சி ஆட்சி அந்த அவலத்தைப் போக்கியது” என்று ஒரு வரலாற்றில் புதைந்துபோன திராவிடர் இயக்கத்தின் அதிமுக்கியமான ஒரு புதையலை தோண்டி எடுத்து மக்கள் முன் வைத்தார்.
மேலும் அதையொட்டியே அண்ணாவின் சாதனை களைச் சொல்லி விட்டு, “இவ்வளவு சாதனைகளையும் ஒரு துளி ரத்தம் சிந்தாமல் செய்த இயக்கம் திராவிடர் இயக்கம்” என்று அழுத்தம், திருத்தமாகச் சொல்லி, தொடக்கத்தில் சொன்னதை நினைவுபடுத்தும்விதமாக, “இந்த வெற்றிகளுக் கெல்லாம் நாம் பயன்படுத்திய ஆயுதத்திற்கு பெயர்தான் தந்தை பெரியார்! இன்று அதே போராயுதத்தை, பேராயுதத்தை எடுத்துத்தான் இந்த மூன்று கொடுமைகளுக்கு எதிராகப் போராடுகிறோம்” என்று பலத்த கைதட்டல் களுக்கிடையே சொன்னார். தொடர்ந்து நீட், புதிய தேசியக் கல்விக் கொள்கை இந்த இரண்டின் காரணமாக பறிபோகும் மாநில உரிமைகள் ஆகியவற்றை பாடம் எடுப்பது போல் மக்களுக்கு சாலப்பரிந்து சொல்லிக்கொடுத்து உரையை நிறைவு செய்தார்.
தொடர்ந்து தி.மு.க. மாவட்டச் செயலாளர், மாணவரணிச் செயலாளர், மேயர், துணை மேயர் ஆகியோருக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்து வாழ்த்துகளைத் தெரிவித்து, தோழர்களிடம் பிரியாவிடை பெற்று, அங்கிருந்து செங்கற் பட்டுக்கு புறப்பட்டார்.
இந்த பரப்புரை கூட்டத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பின ருமான க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில மாணவரணி செயலாளருமான சி.வி.எம்.பி.எழிலரசன், ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன், வடக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் குமார், மாவட்ட துணைப் பெருந்தலைவர் நித்யா சுகுமார், ம.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் கருணாகரன், ம.தி.மு.க. நகர செயலாளர் மகேஷ், ம.தி.மு.க.செயற்குழு உறுப்பினர் அருள், வி.சி.க.மாவட்ட செயலாளர் செல்வராஜ், சி.பி.எம்.மாவட்ட செயலாளர் சங்கர், சி.பி.அய். நகர செயலாளர் கமல நாதன், தமிழ் உரிமை கூட்டமைப்பு பொறுப்பாளர் அமுதன், தமிழக கட்டட தொழிலாளர் மத்திய சங்க மாவட்ட தலைவர் பெருமாள் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் பகுதி கழக செயலாளர் கோ.நடராஜ் நன்றி கூறினார்.
செங்கற்பட்டு
நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்புப் பரப்புரை பெரும் பயணப்பொதுக் கூட்டம் நேற்று (12.4.2022) செங்கற்பட்டு பழைய பேருந்து நிலையம் முன்பு மாவட்ட தலைவர் செங்கை பூ.சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கி.செம்பியன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மண்டல தலைவர் எல்லப்பன், மண்டல செயலாளர் கதிரவன், தாம்பரம் மாவட்ட தலைவர் முத்தையன், சோழிங்க நல்லூர் மாவட்ட தலைவர் வீரபத்திரன், சோழிங்கநல்லூர் மாவட்ட செயலாளர் ஜெயராமன், தாம்பரம் மாவட்ட செயலாளர் நாத்திகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் மகளிர் பாசறை மாநில செயலாளர் சே.மெ.மதிவதனி, கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் ஆகியோர் உரையாற்றிய பின் நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
தமிழர் தலைவர் உரை
தமிழர் தலைவர் தம் உரையில் எடுத்த எடுப்பிலேயே,
“எங்களால் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஆகவே வந்த தி.மு.க. ஆட்சியை செயல்பட விடாமல் தடுப்பதற்காக, சட்ட விரோதமாக இருந்தாலும் நாங்கள் ஒரு போட்டி அரசாங்கம் நடத்துவோம் என்று ஒரு ஆளுநர் சொல்லிக் கொண்டி ருக்கிறார்.” என்று பளிச்சென்று குற்றம் சாட்டினார்.
பரப்புரைப் பயணம் மேற்கொண்டதிலிருந்து செங்கற் பட்டில் நடந்த மாநாட்டை (1929) மய்யப்படுத்தியே பேசி வந்தவர், இப்போது செங்கற்பட்டிலேயே பேசுவது மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக இருந்தது. இன்று நாம் உலகளவில் வளர்ந்திருக்கிறோம். அதற்கு அடித்தளம் இந்த செங்கற்பட்டுதான்!” என்று சொல்லிவிட்டு உடனடியாக, கலைஞர் நினைவு மேலிட்டு, “சுயமரியாதை இயக்க 80 ஆம் ஆண்டில் முத்தமிழ் அறிஞர் கலைஞரை அழைத்து இதே செங்கற்பட்டிலேயே ஒரு மாநாடு நடத்தினோம்” என்று 20 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகளில் மூழ்கினார். அதையும் முழுமையாக சொல்ல முடியாமல் மிகுந்த நெகிழ்ச் சியுடன், “அதற்குப்பிறகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், இங்கே பெரியார் சிலையைத் திறந்து வைத்தார்” என்று காலத்தின் முன்னும் பின்னும் போய் வந்தார். பிறகு, “அந்த சுயமரியாதை மாநாட்டின் அத்தனை தீர்மானங்களும் இன்றைக்கு செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
செங்கற்பட்டிலும் மேயர், ஒரு பெண் தான் என்பதை நினைவு கூர்ந்து, “அந்த மாநாட்டின் தீர்மானங்கள் எல்லாம், நாட்டின் சட்டங்களாக, திட்டங்களாக மாறியிருக்கின்றன.” என்று கூறி மாநாட்டின் மாபெரும் தாக்கத்தை புரியவைத்தார். மீண்டும் சுயமரியாதை இயக்கத்தின் 80 ஆம் ஆண்டில் சைதாப்பேட்டையில் இருந்து, செங்கற்பட்டிற்கு ஊர்வலமாக வந்த அம்மாநாட்டில், கலைஞர் மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருந்ததையும், திராவிடர் கழகம் எல்லாவற்றையும் ஆவணப்படத்தி வருவதை பாராட்டியதையும் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து, மற்றவர்களையும் நெகிழச் செய்தார்.
செங்கற்பட்டு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களில் ‘அனைவருக்கும் கல்வி’ என்பதும் ஒன்று என்று சொல்லி, திராவிடர் இயக்கத்தின் தொலை நோக்குப் பார்வையை எடுத்துரைத்தார்.
இந்த தீர்மானத்தை சுருங்கச் சொல்லி விளங்க வைக்க, கலைஞர் வாழ்வில் நடைபெற்ற ஒரு அரிய நிகழ்வை, ஒரு சுவையான கதையைப்போல சொல்லிக் காட்டினார். அதாவது, சென்னை பல்கலைக்கழகத்தில் நெ.து.சுந்தரவடி வேல் துணைவேந்தராக இருந்தபோது, கலைஞர் அங்கே அழைக்கப்பட்டிருந்தார். துணைவேந்தர் கலைஞரை மாடிப்படி வழியாக அழைத்துச் செல்கிறார். அப்போது, முதலமைச்சர் கலைஞரின் பாதுகாப்பு கருதி, நெ.து.சு.அவர்கள், “அய்யா, பார்த்துங்க; படிங்க;Óஎன்று எச்சரிப்பது போலத் திரும்பத் திரும்பச் சொன்னதும், நகைச்சுவை உணர்வு மிக்க கலைஞர், “ஏங்க, எங்கப்பா அப்போதே சொல்லியும் படிக்காத நானா இப்போது படிக்கப்போகிறேன்” என்று சொன்னதையும், உடன் இருந்தவர்கள் வயிறு வலிக்கச் சிரித்ததையும் சொல்லி, ஒரே நேரத்தில் கலைஞரின் நகைச்சுவையையும், சுயமரி யாதை இயக்கம், பார்ப்பனரல்லாத மக்களை படி, படியென்று வலியுறுத்தி படிக்க செய்ததையும் சொல்லிவிட்டார். அப்போது கேட்டவர்கள் மட்டுமல்ல, ஆசிரியர் சொல்லி இப்போது கேட்டவர்களும் சிரித்தனர்; சிந்தித்தனர்.
தொடர்ந்து, ”ஆகவே தோழர்களே! படி, படியென்று சொன்னது திராவிடர் இயக்கம்! இதுதான் திராவிட மாடல்! இதைத்தான் நமது ஒப்பற்ற முதல்வர் செய்துகொண்டிருக்கிறார், இதுதாங்க அவங்களுக்கு பொறுக்கவில்லை” என்று வெளிப்படையாக நடந்து கொண்டிருப்பது ஆரியர், திரா விடர் போராட்டம் தான் என்பதை வெட்டவெளிச்சம் ஆக்கினார். பிறகு, இந்த மூன்று முக்கிய பிரச்சினைகள் பற்றி விளக்கி, ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. ஆகியவற்றின் சூழ்ச்சிகளை சுருக்கமாக எடுத்துரைத்தார். அரசமைப்புச் சட்டப்படி ஒன்றிய ஆட்சியாளர்கள் மாநில உரிமைகளை ஆக்கிரமிப்பு செய்கின்றனர். எனவேதான், இதில் நாம் வெற்றி பெற வேண்டுமா? இல்லையா? என்பதை மக்கள் முடிவு செய்யவேண்டும்” என்று கூறி நிறைவு செய்தார்.
இந்த பரப்புரை கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, செங்கற்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலெட்சுமி மதுசூதனன், தி.மு.க.நகர செயலாளர் நரேந்திரன், நகர்மன்றத் தலைவர் தேன்மொழி, நகர்மன்றத் துணைத்தலைவர் அன்புச் செல்வன், ம.ம.க.மாவட்ட செயலாளர் முகம்மது யூனுஸ், சி.பி.எம்.மாவட்ட செயலாளர் பாரதி அண்ணா, சி.பி.அய்.பொறுப்பாளர் சேகுவேரா தாஸ், வி.சி.க.மாவட்ட செயலாளர் தமிழரசன், அமைப்பு செயலாளர் பன்னீர்செல்வம், பொதுக் குழு உறுப்பினர் பக்தவத்சலம், மாவட்ட ப.க.தலைவர் சிவக்குமார், மாவட்ட ப.க.செயலாளர் தீனதயாளன், மாவட்ட ப.க.அமைப்பாளர் பிச்சை முத்து, மாவட்ட மகளிரணி தலைவர் ஆனந்தி, செங்கற்பட்டு நகர தலைவர் தனசேகர், செங்கற்பட்டு நகர செயலாளர் யாழன், மாவட்ட இளைஞரணி தலைவர் கவுதம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற பொறுப்பாளர் வீரமணி, செங்கற்பட்டு நகர அமைப்பாளர் மனோகரன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்டஅமைப்பாளர் இராஜேந்திரன் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment