படியப்பா, படியப்பா, நாள்தோறும் படியப்பா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 23, 2022

படியப்பா, படியப்பா, நாள்தோறும் படியப்பா!

புத்தம் பு துமனிதராக நாம் ஆக புத்தகங் கள் தானே புதுமையை- பொலிவை - நமக்குள் புகுத்தும் புதிய படைக்கலன்கள்!

‘‘மனிதரெலாம் அன்புநெறி காண்பதற்கும்

மனோபாவம் வானைப் போல் விரிவடைந்து

தனி மனிதத் தத்துவமாம் இருளைப் போக்கிச்

சகமக்கள் ஒன்றென் பதுணர்வதற்கும்

இனிதினிதாய் எழுந்த உயர்எண்ண மெல்லாம்

இலகுவது புலவர்தரு சுவடிச்சாலை;

புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண் டிடல்

புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும்!

தனித்தமைந்த வீட்டிற் புத்தகமும் நானும்

சைம யோகம் புரிந்ததொரு வேளை தன்னில்

இனித்த புவி இயற்கை யெழில் எல்லாம் கண்டேன்;

இசை கேட்டேன்! மணம்மோந்தேன்; சுவைகள் உண்டேன்

மனிதரிலே மிக்குயர்ந்த கவிஞர் நெஞ்சின்

மகாசோதியிற் கலந்த தெனது நெஞ்சம்!

சனித்ததங்கே புத்துணர்வு! புத்துணர்வு! புத்தகங்கள்

தருமுதவி பெரிது, மிகப்பெரிது கண் டீர்!’’

புத்தக சாலை வேண்டும் என்று சுமார் 70 ஆண்டுகளுக்குமுன் புரட்சிக்கவிஞரின் முதல் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற இனிய கவிதைகள் இவை.

‘‘ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் சிறந்த பரிசு புத்தகங்கள்தான்’’ என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

குடும்பத்தைவிட்டு வெளியேறுங்கள் என்று சொல்லப்பட்டபோது அறிஞர் இங் கர்சால் சென்ற இடம் புத்தக சாலைகள்தான்!

கோவை தொழில் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு அவர்கள், ஹிக்கின் பாதம்ஸ் போன்ற பெரிய நூல் விற்பனைக் கடை களுக்குச் சென்று புதிதாக வந்த பல புத்த கங்களை வாங்கிக்கொண்டு வந்து, சென் னையில் அவர் தங்கும் ‘‘காஸ்மோ-பாலிட் டன்’’ கிளப்பில் உள்ள அறையில் தங்கிப் படிப்பாராம்; திடீரென்று சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று, புதுடில்லிக்கு ‘‘கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரசுக்கு’’ டிக்கெட் வாங்கிக் கொண்டு ரயிலிலேயே இந்தப் புது நூல்க ளைப் படித்துவிட்டு, அதே வண்டி சென்னை  திரும்புகிறதல்லவா அதிலேயோ அல்லது அடுத்துவரும் வண்டியிலேயோ படித்துக் கொண்டே திரும்புவாராம். அவரது டில்லி போன்ற ஒன்றரை நாள் ரயில் பயணங்களே கூட, பயணத்திற்காக அல்ல; பிறரது தொல் லைகள், குறுக்கீடுகள் இன்றி படித்துச் சுவைப்பதற்கே தானாம்!

படித்தாகவேண்டும் என்ற உள்ளுணர் வின் வெளிப்பாடுதான் எப்படி எப்படியெல் லாம் அமைந்துள்ளன; வெளிப்படுகின்றன என்பதைப் பாருங்கள்!

இந்நூல் புத்தகங்கள் இப்படி உலகம் முழுவதும் இப்படி பல கோடி படிவங்க ளாகப் பரவும் நிலை - ‘‘ஜான்கூடன் பர்க்’’ என்ற ஜெர்மானியன் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்ததனால்தானே?

அதுபோல (கம்ப்யூட்டர்) கணினியின் கண்டுபிடிப்பால் “DTP” (Desk Top Publishing)  என்ற முறையில், எவ்வளவு எளிதில் அச்சிட முடிகிறது!

இ-காமர்ஸ் என்ற மின்னணுவியல் வளர்ச்சியைப் பயன்படுத்தி உலகின் ஒரு மூலையில் உள்ள கிடைத்தற்கரிய நூலை இன்னொரு மூலையில் உள்ளவர்களால் இப்போது பெற முடிகிறதே! மின்னணுப் புத்தகங்கள்- இணையதளங்களில் உட னடியாகக் கிடைக்கின்றனவே!

தூக்கிலிடுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே தூக்குக் கயிற்றை முத்தமிட்ட நாத்திகன் பகத் சிங்கின் நினைவும், அறுவைச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுமுன் 24 மணிநேரம் அவகாசம் கேட்ட அண்ணா- ஒரு நூலைப் படிக்கவேதான் மருத்துவர்களிடம் அண்ணா அறுவைச் சிகிச்சையை நாளை வரை தள்ளி வைக்கக் கேட்டுக்கொண்டார் - சகுனம் பார்த்து அல்ல என்பதை அறிந்த மருத்துவ நிபுணர்கள், அண்ணாவின் புத்தகக் காதல் கண்டு இன்ப அதிர்ச்சியை அல்லவா அடைந்தனர்!

எனவே, இதைப் படிக்கும் நண்பர்கள் உடனடியாக 2 புத்தகங்களை வாங்கி, ஒன்று உங்களுக்காக, மற்றொன்று உங்களுக்கு மிக வேண்டிய நண்பருக்கு அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு என்று அறிவிக்க முயற்சியுங்கள்.

- நூல்: தமிழர் தலைவர் எழுதிய "வாழ்வியல் சிந்தனைகள்" பாகம் 6


No comments:

Post a Comment