சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை,ஏப்.18- சட்டமன்றப் பேர வைக் கூட்டத்தில் இன்று (18.4.2022) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆளுநர் குறித்து சட்டமன்ற விதி 110இன்கீழ் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவ ருக்கு ஆளுநர் அனுப்பி வைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களை அவ மதிப்பதாகும் என்று குறிப்பிட்டார்.
அதன் விவரம் வருமாறு,
பேரவைத் தலைவர் அவர்களே, விதி 110-இன்கீழ் தங்கள் அனுமதியோடு ஓர் அறிக்கையை இந்தப் பேரவையில் நான் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே, ஏழரைக் கோடி தமிழ் மக்களின் ஒட்டு மொத்த உணர்வையும் பிரதிபலிக்கும் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவு கடந்த 210 நாட்களாக கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் முடங்கிக் கிடக்கிறது. நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட அந்தச் சட்டமுன்வடிவு கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் கவனிப்பாரின்றி கிடக்கிறது.
அப்படிப்பட்ட வேளையில், அதே ஆளுநர் மாளிகை வளாகத்தில் நடக்கக் கூடிய தேநீர் விருந்து என்ற விழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது என்பது ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளைப் புண் படுத்துவதாகவும், சட்டமன்ற மாண் பினை மேலும் சிதைப்பதாகவும் அமை வதாலேயே, அந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள இயலாத நிலை இந்த அரசுக்கு ஏற்பட்டது.
இதுகுறித்து ஆளுநர் அவர்களுக்கு நானே ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். அதில் அதற்கான விவரங்கள் எல்லாம் விரிவாகத் தரப்பட்டிருக்கின்றன.
ஆளுநர் அவர்களுடன் எங்களுக்கு எந்தவிதமான தனிப்பட்ட விரோதமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், தனிப்பட்ட முறையில் தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சரான எனக்கும் மிகமிகச் சுமுகமான உறவு இருக்கிறது. நேரில் பேசும்போது, இந்த ஆட்சியின் செயல் பாடுகளை மிகவும் பாராட்டி அவர் பேசியிருக்கிறார். நாங்கள் ஆட்சி நடத் தக்கூடிய விதம் குறித்து பொது மேடையிலேயே, ஆளுநர் அவர்கள் பாராட்டிப் பேசியிருக்கிறார்கள். அது ஊடகங் களில் எல்லாம் வெளியாகி இருக்கிறது.
ஆளுநர் அவர்கள் பழகுவதற்கு அதிகம் இனிமையானவர். எங்களுக்கு அதிகமான மரியாதையை அவர் தருகி றார். ஆளுநர் என்ற முறையில் அந்தப் பதவிக்குரிய மரியாதையை நாங்களும் அளிக்கிறோம்; அளித்துக் கொண்டிருக் கிறோம்; தொடர்ந்து அளிப்போம். இது அரசியல் எல்லைகளைக் கடந்த பண்பாடு. இந்தப் பண்பாட்டை எப் போதும், எந்த நிலையிலும் நாம் அனை வரும் காக்க வேண்டும்; காப்போம்.
தனிப்பட்ட முறையில் எனக்குக் கிடைக்கக்கூடிய பாராட்டுகளை விட, தமிழ்நாட்டுக்குக் கிடைக்கக்கூடிய நன்மையும், பலனுமே முக்கியமானது. அதனையே முக்கியமானதாக நான் கருதுகிறேன்.
இந்தச் சட்டமன்றத்தின் மாண்பை, தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மதித்து, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் அவர்களுக்கு ஆளுநர் அவர்கள் அனுப்பி வைத்தாக வேண்டும். அப்படி அனுப்பி வைக் காதது முறையானது அல்ல. இந்தச் சபையின் மாண்புக்கு விரோதமானது ஆகும். ஆளுநர் அவர்கள் அனுப்பி வைக்காதது என்பது எனக்கல்ல; இந்தத் தமிழ்நாட்டு மக்களை அவ மதிக்கக்கூடிய செயலாகும்.
நான் இந்தப் பேரவைக்குச் சொல் வதெல்லாம்- சொல்ல விரும்புவதெல் லாம், கடந்த 50 ஆண்டு கால பொது வாழ்க்கையில் நான் எத்தனையோ வலிகளையும், அவமானங்களையும் சந்தித்து வந்திருக்கிறேன். அது எனக்கு ஒரு பொருட்டல்ல. இந்த 50 ஆண்டு கால பொது வாழ்க்கை எனக்கு கற்றுத் தந்தது எல்லாம் வலிகளையும், அவ மானங்களையும், புகழ்ச்சிகளையும், பாராட்டுரைகளையும் புறந்தள்ளி விட்டு - “என் கடன், பணி செய்து கிடப்பதே”என்று செயல்படுவதுதான். அப்படித்தான் நான் செயல்பட்டு வருகிறேன்.
''பொது வாழ்க்கையில் மக்கள் நலன் சார்ந்து செயல்படுவதுதான் தலையாய கடமை'' என்பதே அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் வழியிலே நான் கற்றுக் கொண்டிருக்கக்கூடிய பாடமாகும். அந்த வழியில்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன். ஆனால் தனிப் பட்ட முறையில் எனக்குக் கிடைக்கக் கூடிய வலி, அவமானங்களைப் பொறுத் துக் கொண்டு, அதனால் தமிழ்நாட் டுக்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்கும் என்றால், புகழ்ச் சிகளையும், பாராட்டுரைகளையும் நான் புறந்தள்ளி விட்டு, அவமானங் களையும், வலிகளையும் தாங்கிக் கொள் ளவே நான் எப்போதும் தயாராக இருப்பேன்.
தமிழ்நாட்டு மக்களுடைய ஒட்டு மொத்த உணர்வாக இருக்கக்கூடிய நீட் விலக்கு சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதுதான் முக்கி யம். அதற்காகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. எனவே, தனிப்பட்ட ஒரு நபருக்கான மரியாதைகள், புகழு ரைகள் இவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு, தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி தொடர்ந்து நான் முயற்சித்துக் கொண்டேயிருப்பேன்.
தமிழ்நாடு முதலமைச்சராக இந்தச் சட்டமன்றத்தின், நூற்றாண்டு கண்ட சட்டமன்றத்தின் மாண்பைக் காக்கும் பொறுப்பும் என்னுடையது என்று புரிந்து கொண்டதால்தான் இந்த முடிவை எடுக்க நேரிட்டது. தமிழ் நாட்டு மக்களுடைய உணர்வுகளைத் தொடர்ந்து நாம் அனைத்து மன்றங்க ளிலும் எதிரொலிப்போம். அவர்களது உரிமையை நிலைநாட்டுவோம்.
ஆளுநர் அவர்கள் திருப்பி அனுப் பிய மசோதாவை, இந்தச் சட்டமன்றத் தின் சிறப்புக் கூட்டத்தில் 8-2-2022 அன்று நிறைவேற்றி, மீண்டும் ஆளுநர் அவர்களுக்கு நாம் அனுப்பி வைத்தோம். இன்றுடன் 70 நாட்கள் ஆகின்றன. இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநர் அவர்கள் முடிவு செய் துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அது தொடர்பான நடவடிக்கைகளைப் பார்த்துவிட்டு, தேவைப்பட்டால், அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்பதை இந்த அவைக்குத் தெரிவித்து அமைகிறேன்.
-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment