பூமாலை வேண்டாம்!
கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்
கூடுங்கள், கூடுங்கள்! பெருந்திரளாய்!
ஏப்ரல் 3 ஆம் தேதி நாகர்கோவிலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஒரு பிரச்சாரப் படை புறப்பட்டு, ஏப்ரல் 25 இல் தலைநகரமாம் சென்னையில் சங்கமிக்கிறது!
எதற்காக இந்தப் பிரச்சாரப் பயணம்?
1. ‘நீட்' எனும் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு
2. புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு
3. மாநில உரிமைகள் மீட்பு
அச்சுறுத்தும் ஆதிக்கக் கும்மிருட்டு மனம் கொண்டவர் களைத் தவிர - மீதியுள்ள அத்தனைப் பேரும் இரு கைகூப்பி இந்தப் பிரச்சாரப் படையை ‘‘வருக! வருக!!'' என வரவேற்பர் - வாழ்த்து மடல் வாசித்துக் கொடுப்பர் என்பதில் எள்மூக்கு முனை அளவும் அய்யப்பாடில்லை!
‘நீட்'டை மட்டுமல்ல - எந்த நுழைவுத் தேர்வையும் எதிர்க்கிறோம். பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் தேர்வு பின்பற்றப்பட்ட தமிழ்நாடுதான் மருத்துவக் கட்டமைப்பில் இந்தியத் துணைக் கண்டத்துக்கே தலைமை தாங்குகிறது.
ஏன், உலகின் பல நாடுகளிலும் தமிழ்நாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவர்கள் ‘பலே, பலே' என்று பாராட்டும் வகையில் பரிணமிக்கின்றனர்.
பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்த- கிராமப்புறத்தைச் சேர்ந்த டாக்டர் ரெலா தான் உலகின் தலைசிறந்த விரல் விட்டு எண்ணக் கூடிய கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர்களுள் ஒருவராக நிமிர்ந்து நிற்கிறார்.
பிளஸ் டூ அடிப்படையில் குப்பனும், சுப்பனும் டாக்டர் ஆவதா? இந்த வயிற்றெரிச்சலின் அடையாளம்தான் ‘நீட்' தேர்வு.
இந்தியாவில் ஒரே வகையான கல்வித் திட்டம் உண்டா? இல்லையே, அப்படி இருக்கும்போது எப்படி ஒரே மாதிரியான ‘நீட்' தேர்வு?
உண்மை என்ன தெரியுமா?
இந்த ‘நீட்' சி.பி.எஸ்.இ. என்னும் கல்வித் திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது.
இந்த சி.பி.எஸ்.இ.யில் படிப்போர் யார்?
மேல்தட்டு மக்கள்தானே! ஆக, ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு, சூழ்ச்சி என்னும் மீசையை முறுக்கிவிட்டு, ‘நீட்' தன்னுடைய முரட்டுக் கையை நீட்டுகிறது.
ஏனோ தானோ என்று எழுதவில்லை. பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி தேர்வு நடந்தபோது சி.பி.எஸ்.இ. மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் பெற்ற இடம் ஒரே ஒரு விழுக்காடு.
பிளஸ் டூ தேர்வு மதிப்பெண் முறையை உதைத்துத் தள்ளி, அந்த இடத்தில் ‘நீட்'டைக் கொண்டு வந்த நிலையில், சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்குக் கிடைத்த இடம் 39 விழுக்காடு.
புரிகிறதா, புரிநூலாரின் சூழ்ச்சி? மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்குச் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை வைத்த நாசகாரக் கும்பலாயிற்றே!
‘நீட்' தேர்வும் அப்படிதான்; அப்படிதான்!
இரண்டாவது தேசிய புதிய கல்விக் கொள்கையாம். இந்தியாவே ஒரே தேசம் இல்லை என்கிறபோது இங்கு எங்கே இருந்து குதித்தது தேசிய கல்வி?
ஹிந்தியைத் திணித்துப் பார்த்தார்கள் - ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்ப்பு எரிமலை தந்தை பெரியார் மண்ணில் வெடித்துக் கிளம்பிய நிலையில், துண்டைக் காணோம், வேட்டியைக் காணோம் என்று ஓடியது ஹிந்தி.
இப்பொழுது தேசியக் கல்வி என்ற முக்காடு போட்டு ஹிந்தி நுழைகிறது - இதன் ‘மம்மி'யான சமஸ்கிருதமும் நுழைகிறது.
3, 5, 8 ஆம் வகுப்புகளிலும் தேர்வாம். 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கும் தேர்வாம்!
தேர்வு! தேர்வு!! தேர்வு!!! என்று இளம் குருத்துகள் முதற்கொண்டு மாணவர்கள் வரை தலைகளில் இடி! இடி!! இடி!!!
5 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடையாவிட்டால் தொழில் கல்விக்குச் செல்லவேண்டுமாம். கிராமத்தில் எந்தத் தொழிற் சாலையில் பயிற்சி பெறுவார்கள்? அப்பன் தொழிலுக்குத்தானே செல்லவேண்டும்?
அன்று 1952-1954 களில் ஆச்சாரியார் (இராஜாஜி) கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் புதுப்பிக்கப்படுகிறது.
இந்தக் கல்வித் திட்டம் கல்வியாளர்களாலும் தயாரிக்கப் பட்டதும் அல்ல!
மூன்றாவதாக மாநில உரிமை பறிப்பு எதிர்ப்பு. மறைந்த முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர்தான் ஒருமுறை சொன்னார்.
சென்னை தலைமைச் செயலகக் கோட்டை வளாகத்தில் மண்டும் புல்லினை வெட்டுவதற்குக்கூட ஒன்றிய அரசின் அனுமதியைப் பெறவேண்டிய நிலையை இடித்துக் காட்டிச் சொன்னதுண்டு.
குஜராத் முதலமைச்சராக இருந்தபோது ‘நீட்'டையும், ஜி.எஸ்.டி.யையும், ஆதார் கார்டையும் எதிர்த்து நெடு முழக்கமிட்ட அதே நரேந்திர மோடி, பிரதமரான பிறகு ‘‘தப்புத் தாளம்'' வாசிக்கிறார். அகில இந்திய கல்வித் துறை (IES) வரப் போகிறதாம்!
இவர் பிரதமராக இருக்கலாம் - ஆனால், இவரின் காதைத் திருகும் கை ஆர்.எஸ்.எஸ். தலைமைப் பீடமான நாக்பூரில் அல்லவா இருக்கிறது.
இந்த மூன்று அபாயகரமான திட்டங்களைத் திருகி எறியவேண்டாமா?
இதற்கெல்லாம் குரல் கொடுக்க தந்தை பெரியாரின் தமிழ் மண்தானே முன்னடி எடுத்து வைக்கவேண்டும்.
நாடாளுமன்றத்தில்கூட ‘‘தந்தை பெரியார் வாழ்க!'' ‘‘திராவிடம் வெல்க!'' என்ற குரல் ஒலிக்க ஆரம்பித்துவிட்டதே!
திராவிட இயக்கம் எடுத்த முடிவுகள் எல்லாம் வெற்றி பெற்றதற்குக் காரணம் அது மக்களிடம் சென்றதுதான் - பிரச்சாரத்தின்மூலம்தான்.
இப்பொழுதும் அதே அணுகுமுறையைக் கையில் எடுத்துக்கொண்டுதான் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி புறப்பட்டுள்ளார்.
இளைஞர் பட்டாளம் அவரோடு அணிவகுக்கிறது. நாகர்கோவிலில் தி.மு.க.வின் மகளிரணி செயலாளர் மானமிகு கனிமொழி கருணாநிதி எம்.பி., நாளை தொடங்கி வைக்கிறார்.
ஏப்ரல் 25 ஆம் தேதி சென்னையில் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நிறைவுரை ஆற்றி முடித்து வைக்கிறார்.
இடைநாள்களில் ஆங்காங்கே மாண்புமிகு அமைச்சர்களும், சமூகநீதி, மதச்சார்பின்மை கொள்கை கொண்ட இயக்கத்தினரும் பங்குகொள்கின்றனர்.
பிரச்சாரப் பயணத்துக்காக ஒரு துண்டறிக்கை வெளியீடு; ஒரு சிறிய நூல் (16 பக்கங்கள்) தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் அரசியல் கிடையாது தோழர்களே! ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பறிக்கும் திட்டங்களைத் தீர்த்துக் கட்டும் திட்டம் - நோக்கம்!
ஒடுக்கப்பட்ட மக்களே உங்களுக்காகத்தான் - முதல் தலைமுறையாகக் கல்வி கண் விழிக்கும் மக்களே உங்களுக் காகத்தான் - சிறுமைக்கு ஆளாக்கப்பட்டுவரும் சிறுபான்மை மக்களுக்காகத்தான் - பிறவி அடிமைகளாக ஆக்கப்பட்ட பெண்களுக்கும் சேர்த்துதான்.
திராவிடர் கழகம் எதைச் செய்தாலும், அது மக்களின் நலனை முன்னிறுத்தித்தான். தன்னை அழித்துக்கொண்டு ஒளி கொடுக்கும் கருப்பு மெழுகுவத்திகள் நாகர்கோவிலிலிருந்து புறப்பட்டு வருகிறார்கள், வருகிறார்கள்!
வழிநெடுக திரண்டு வந்து வரவேற்பு கொடுங்கள் - திராவிடர் கழகத்துக்காக அல்ல -
இந்தப் பயணத்தின் நோக்கம் உங்களுக்காகத்தானே -
அந்த உணர்வோடு உங்களின் ஆதரவுக் கரங்களை நீட்டுங்கள்! நீட்டுங்கள்!
பெருந்திரளாகக் கூடுங்கள்! கூடுங்கள்!!
பிரச்சாரக் கருத்துகளை நுகருங்கள்! நுகருங்கள்!
மூன்று கொள்கைகளை முன்னிறுத்தி முழக்கம்! முழக்கம்!!
படை வருகிறது, படை வருகிறது - பராக்! பராக்!!
வாழ்க பெரியார்!
வெல்க திராவிடம்!!

No comments:
Post a Comment