உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகனின் பிணையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
லக்னோ, ஏப்.19 லக்கிம்பூர் கேரி பகுதியில் போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொலைசெய்த வழக்கில் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ராவிற்கு அலகாபாத் நீதிமன்றம் கொடுத்த பிணையை ரத்து செய்து ஒருவாரத்திற்குள் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மீஸ்ராவின் கார் விவசாயிகள் மீது மோதியது. இந்த விபத்தில் 4 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்ட வன்முறையில் ஒரு பத்திரிகையாளர் உள்பட 4 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.இச்சம்பவத்தில் உச்சநீதிமன்றத்தின் தொடர்ச்சியான தலையீட்டுக்கு பின்னர் ஆசிஷ் மிஸ்ராவை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆசிஸ் மிஸ்ராவுக்கு எதிராக சிறப்பு புலனாய்வுக்குழு 5 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இவ்வழக்கில் ஆசிஸ் மிஸ்ராவின் பிணை மனுக்கள் அடுத்தடுத்து கீழமை நீதிமன்றங்களில் நிராகரிக்கப்பட்டன. கடைசியாக அலகாபாத் உயர்நீதிமன்றம் ஆசிஸ் மிஸ்ராவுக்கு கடந்த பிப்ரவரி 10ஆம் தேதியன்று பிணை வழங்கியது
பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலும், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இரண்டு வழக்குரைஞர்கள் சார்பிலும் அவருக்கு வழங்கிய பிணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான வாத, பிரதிவாதங்கள் கடந்த 4ஆம் தேதி முடிவடைந்து விட்டன. அன்றைய தினமே வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட் டது.
இந்த நிலையில் ஆசிஸ் மிஸ்ராவின் பிணையை எதிர்த்த வழக்கில் உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதி சூரிய காந்தி உள்ளிட் டோர் அடங்கிய அமர்வு நேற்று (18.4.2022) தீர்ப்பளித்தனர். ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ராவின் பிணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பிணை ரத்து செய்யப்பட்டதால் ஆசிஷ் மிஸ்ரா ஒரு வாரத்தில் சரணடையவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment