அன்றைக்கு ஆவடி; இன்று நெய்வேலி 300 பேர் ஆணையைத் தளபதி தூக்கி எறிய வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 8, 2022

அன்றைக்கு ஆவடி; இன்று நெய்வேலி 300 பேர் ஆணையைத் தளபதி தூக்கி எறிய வேண்டும்

 முனைவர் பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன்

அண்ணா பெயரில் கட்சி - ஆனால் நடவடிக்கைகள் எல்லாம் அண்ணாவின் கொள்கைக்கு விரோதம். மாநில சுயாட்சி என்பதை மறந்து மண்டியிட்டது இரட்டையர் ஆட்சி.

ஆனால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினோ, இது பெரியார் மண், நடப்பது பெரியாரின் கொள்கை ஆட்சி, சமூக நீதிக் கோட்பாட்டுக் கொள்கை ஆட்சி என்பதில் சற்றும் பிசகாது ஆட்சி நடத்துகிறார்.

ஆனால் தளபதியின் சீரியஆட்சிக்கு நிம்மதி தராமல் ஒத்துழைப்பு நல்காமல் காலிகளும் காவிகளும் தொல்லை தந்தாலும் - தூணாக நின்று அரணாக அய்யாவின் ஆட்சி என்பதால் - ஆசிரியர் தாங்கிப் பிடிக்கிறார்.

இருப்பினும் ஆசிரியரைப் போர்ப்பரணி பாடப் போராட்டம் நடத்திடச் செய்து வருகின்றனரே.

அன்னை மணியம்மையார் அன்று தி.மு.கழக ஆட்சியின் போதுதான் கைது ஆகி, ராவணலீலா வழக்கு மூன்றாண்டுகளுக்கு நடைபெற்று விடுதலை ஆனார்.

இன்று தார்ச்சட்டியும் தூரிகையும் ஏந்திச் சென்ற தமிழர் தலைவர், தளபதி ஆட்சியில் கைதாகி வரலாறு படைத்தார். திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடலில் தீர்மானங்கள் நிறைவேற்றிப் போராட்ட அறிவிப்பு விடுத்துள்ளார்.

நெய்வேலி தமிழர் தலைவர் வாழ்க்கை ஏட்டில் வெற்றிக்கனி பறித்த மண். நெய்வேலி பழுப்பு நிலக்கரிக்கு ராயல்டி பெறக் குரல் கொடுத்து அதில் வெற்றியும் பெற்ற மண்.

அந்த நெய்வேலியில் காவிகளின் ஒன்றிய ஆட்சியில், நெய்வேலி (என்.எல்.சி.) நிறுவனத்தில் பொறியாளர் நியமனத்தில் தமிழர்களைப் புறக்கணிப்பதா? என மே 9ஆம் நாள் இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு அறிவிப்பு வெளியிட்டு அன்று நிறைவேற்றிய தீர்மானங்களில் தீர்மானம் 4 (அ) கூறுவது என்ன?

"அண்மையில் நடைபெற்ற நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பொறியாளர் பணி நியமனங்களில் முற்றிலும் தமிழர்களைப் புறக்கணித்து விட்டு பிறமாநிலத்தவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் வகையில் திட்டமிட்ட சதி அரங்கேற்றப்பட்டுள்ளது. 

'கேட்' தேர்வுகள் குறித்த முறையான  அறிவிப்பின்றி பணி நியமனம் வழங்கப் பட்டிருப்பது விதிமீறல் என்பதைத் தமிழர் தலைவர் அவர்கள் தமது அறிக்கை வாயிலாக முன்பே சுட்டிக் காட்டியிருக்கிறார். எனவே என்.எல்.சி. நிருவாகம் இந்தப் பணி நியமன அறிக்கையைத் திரும்பப் பெற்று முறைப்படி மீண்டும் பொறியாளர் பணித் தேர்வுகளை நடத்திட வலியுறுத்தித் திராவிட கழக இளைஞரணி சார்பில் மே 9ஆம் தேதி திங்களன்று நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்திடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது."

இந்த நேரத்தில் அண்ணாவின் ஆட்சியில் அன்று நடந்த ஒரு நிகழ்வு நம் நினைவில் நிழலாடுகிறது.

அன்றைய இந்தியத் தலைமை அமைச்சர் திருமதி. இந்திராகாந்தி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒய்.பி.சவான், சென்னையில் ஆவடியில் டாங்க் தொழிற்சாலை இருக்கிறது. அது பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்குவது.

400க்கும் மேற்பட்ட தமிழர்கள் அதில் பணியாற்றுகிறார்கள். டில்லியில் ஒரு சதிக்கூட்டம் இன்று போல் அன்று திட்டமிட்டு ஒய்.பி.சவான் சென்னை டாங்க் தொழிற்சாலையை வடமாநிலத்திற்கு  கொண்டு செல்லத் திட்டமிட்டு அறிவிப்பும் வந்து விட்டது.

400 தொழிலாளர்களின் வாழ்வு ஆதாரம் பாதிக்கப்படும் நிலையிலிருந்தது. போர்க் கொடி உயர்த்தினர். போராட்டத்தில் இறங்கினர். முதல்வர் அண்ணா பார்க்கலாம், கடிதம் எழுதுகிறேன் என்றெல்லாம் சொல்லவில்லை. என்ன செய்தார் அண்ணா? தம்முடைய செயலாளர் சொக்கலிங்கம் அவர்களை அழைத்து இந்திரா காந்தி அம்மையாருக்குத் தொலைபேசித் தொடர்பு  பெற்றுத் தரச் சொன்னார். பத்து நிமிடம் இந்திரா அம்மையாரிடம் பேசினார். 400 பேர் வேலை பறி போவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்று எடுத்துரைத்தார்.

பிறகு ஆவடி டாங்க் தொழிற்சாலை பிழைத்தது. இன்றும் செயல்படுகிறது. அன்று ஆவடி, இன்று நெய்வேலி.

ஆனால் இன்று போராட வேண்டியிருக்கிறது. போராட்ட அறிவிப்பும் தந்து விட்டார் தலைவர்.

தந்தை பெரியார் இயக்கம் நடத்திய,  நடத்தும் போராட்டம் எதுவும்  தோற்றதில்லை. வென்றே வந்துள்ளது. அதுபோல் தமிழர் தலைவர் அறிவித்து நடைபெறும் இப்போராட்டமும் வெல்லும்.

No comments:

Post a Comment