திருமங்கலம், மே 8 திருமங்கலம் அருகே பாண்டியர் கால கிரந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உச்சப்பட்டியைச் சேர்ந்த சூரியபிரகாஷ் கொடுத்த தகவலின்படி, மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர், பாண்டிய நாடு பண்பாட்டு மய்ய தொல்லியல் கள ஆய்வாளர் முனீஸ்வரன் தலைமையில், பேராசிரியர் குழுவினர் உச்சப்பட்டி கிராமத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது சூலாயுதம் பொறிக்கப்பட்டு, கிரந்த எழுத்துகளுடன் கூடிய கல்வெட்டு ஒன்றை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து பேராசிரியர் முனீஸ்வரன் கூறுகையில், இந்த கல்வெட்டு 9ஆம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம். பாண்டியர் காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டில் அவனி, மாறன், மடை, தம்மம், அவந்தி, வேந்தன் என தொடர்ச்சியற்ற வார்த்தைகள் உள்ளன. இக்கல்வெட்டு மாறன் வல்லபன் ஆட்சிக்காலம், அதாவது (கி.பி 835 முதல் கி.பி 862) பொறிக்கப்பட்டு இருக்கலாம். கல்வெட்டின் எழுத்து வடிவை பொறுத்து அது கி.பி.9ஆம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என அறியப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த பகுதியில் 15ஆம் நூற்றாண்டை சேர்ந்த குதிரை வீரன் சிற்பம், விஜயநகர சின்னம், வராகன் கோட்டுருவம் ஆகியவை கண்டறியப்பட்டது குறிப்பிடத் தக்கது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ்களுக்கான கட்டணம் உயர்வு
சென்னை, மே 8 அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு சான்றிதழ்களை பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கழகம் சான்றிதழ்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சான்றிதழ்களுக்கான கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பின்படி, தரம் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்து போனால், புதிய சான்றிதழ் வாங்குவதற்கான கட்டணத்தை ரூ.300இல் இருந்து ரூ.3,000 ஆக அண்ணா பல்கலைக்கழகம் உயர்த்தியுள்ளது. அதோடு பட்டம் பெற்ற சான்றிதழ் தொலைந்துவிட்டால், புதிய சான்றிதழ் பெறுவதற்கான கட்டணமும் ரூ.3,000இல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
மேலும் இரண்டாவது முறையாக சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் ரூ.10,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்படும்.இந்த புதிய கட்டண உயர்வு, இம்மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித் துள்ளது.
மேலும், 23 வகையான சான்றிதழ்களுக்கு பத்து மடங்கு கட்டண உயர்வை அமல்படுத்தி அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment