வணங்கி வரவேற்கிறோம் -மறைமலை இலக்குவனார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 8, 2022

வணங்கி வரவேற்கிறோம் -மறைமலை இலக்குவனார்

குமரி முதல் சென்னை வரை

குன்றா எழுச்சியுடன்

கோடையிடிப் பெருமழையாய்க்

கொள்கைப் பரப்புரை;

அரிமா முழக்கமாய்

ஆர்த்தெழுந்த பொழிவுகள்;

ஆசிரியர் அய்யாவின்

அறிவார்ந்த  கருத்துகள்;

தீட்டு என நம்மை ஒதுக்கியோர்

நீட்டு என நேர்மையைத் தள்ளினார்;

நம் பிள்ளைகள் படிக்கும் வாய்ப்பை

நயவஞ்சக முறையால் கிள்ளினார்;

பள்ளிப் படிப்பால்  பெற்ற மதிப்பெண்களைப்

பயனற்றதாய் எள்ளினார்;

கல்வி சிறப்புறும் நல்லதிட்டங்கள்

மாநில அரசின் மரபுரிமை அல்லவா?

தேசியக் கல்விக்கொள்கை என்றே

ஒன்றிய அரசு ஒட்டிக்கொண்டு

இந்தியைத் திணிப்பதும்

சனாதனக் கல்விக்குக்

கால்கோள் அமைப்பதும்

இறையாண்மைக்கு இடர் விளைக்காதா?

பிரிவினை எண்ணத்திற்கு வழிவகுக்காதா?

மாநில உரிமைகளைப் பறிமுதல் செய்வதா?

கல்விவாய்ப்பு எங்கள் பிறப்புரிமை!

ஒன்றிய அரசு கவர்ந்துகொள்வது

வன்முறையான வழிப்பறி அல்லவா?

என்றெலாம் மக்களைச் சிந்திக்கத் தூண்டிய

இணையற்ற கொள்கைப் பரப்புரைப் பயணம்

இனிதே நிறைவுற்றது!மக்கள் கற்றது நிறைய!

சிறப்புற  முடிந்த பரப்புரைப் பெரும்பயணம்

இந்திய நாட்டுக்கே புதிய வழிகாட்டும்!

மக்கள் உள்ளத்தில் தன்னம்பிக்கை ஒளியூட்டும்!

ஒடுக்கப்பட்டோர் மிடுக்குறச் செய்யும்!

அடுக்கிவரும் அடக்குமுறைகள் அனைத்தையும் எதிர்த்து

உரிமைக்குக் குரல் கொடுத்து  ஒன்றுபடத் தூண்டும்!

 ஆசிரியப் பெருந்தகை அய்யா வருக!

வழிகாட்டுங்கள்!தொடர்ந்து இயங்குவோம்!

அறிவுரை கேட்டு அணிவகுத்திடுவோம்!

பார்க்கெலாம் வழிகாட்டும் பகுத்தறிவுச் சூரியனே!

புத்தருக்கு வாய்த்த அசோகரைப் போலவே

தந்தை பெரியாரின் வழிவந்த தோன்றலே!

வணங்கி வரவேற்கிறோம்!

வருக! வருக! வாழ்க அய்யா!

No comments:

Post a Comment