சென்னை, மே 30 தமிழ்நாட்டில் கடும் கோடை நேற்றுடன் (28.5.2022) நிறைவடைந்தாலும் சில நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மய்யம் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் மே 4ஆம் தேதி தொடங்கி 25 நாட் களுக்கு கடும் கோடை காலம் ஒவ்வொரு ஆண்டும் நிகழும். இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிக அளவில் இருக்கும். ஆனால் சமீபகாலமாக கடும் கோடைக்கு முன்பே வெயில் அதிகமாக காணப் பட்டது. ஓரளவுக்கு மழை பெய்தாலும் மார்ச் 15ஆம் தேதிக்கு மேல் தான் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது.
தமிழ்நாட்டில் கடும் கோடை தொடங்குவதற்கு முன் சேலம், ஈரோடு, வேலூர், திருச்சி, திருப்பூர், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் 98 முதல் 102 பாரன்ஹீட் வரை வெயிலின் அளவு இருந்தது. இந்நிலையில் கடும் கோடை கடந்த மே 4ஆம் தேதி தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. கடந்த சில நாட்களாக பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் இருந்து வரும் நிலையில் நேற்றுமுன்தினம் கடும் கோடை நிறைவு பெற்றது.
சில நாள்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் இனி வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்திருந்தது. அதன்படி தமிழ் நாட்டில் அதிகபட்சமாகத் திருத்தணியில் 108.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது.
மேலும் கடும் கோடைக்காலம் நேற்றுடன் முடி வடைந்தாலும் அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மய்யம் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment