ஜிப்மர் மருத்துவமனையில் அனைத்து கோப்புகளும் ஹிந்தியில்தானா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 9, 2022

ஜிப்மர் மருத்துவமனையில் அனைத்து கோப்புகளும் ஹிந்தியில்தானா?

ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி?

மக்களவை உறுப்பினர் கனிமொழி கண்டனம்

புதுச்சேரி, மே9- புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஜிப்மரில் அலு வலக ரீதியான பயன்பாட்டுக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அலுவல் ரீதியான பயன் பாட்டை ஹிந்தியில் மாற்றுவது தொடர்பாக, புதிய சுற்றறிக் கையை ஜிப்மரின் இயக்குநர் வெளியிட்டுள்ளார். அதில், ஜிப்மரின் பதிவேடு மற்றும் கோப்புகளில் இனி வரும் காலங் களில் இந்தி மொழி மட்டுமே பயன்படுத்தப்படுமென உத்தர விடப்பட்டுள்ளது. 

தி.மு.க.வின் மகளிரணி செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில், "ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? ஒன்றிய அரசு திணிக்க முயலும் இந்தி வேலையில்லா திண் டாட்டத்தைத் தீர்க்குமா? சமத்துவமின்மை மாறுமா? ஏதேனும் ஒரு சமூகப் பிரச்சனையையாவது திருத்துமா? விரிசல்களை ஆழப்படுத்துவது நல்லதில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார். 

ஜிப்மர் இயக்குநரின் இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையில் ஹிந்தித்திணிப்பு 

கவிப்பேரரசு வைரமுத்து கண்டனம்

சென்னை, மே 9- புதுச்சேரி மருத்துவமனையில் ஹிந்தி மட்டுமே அலுவல் மொழியாக்கப்படுவதாக அதன் இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு வெடித்துள்ளது. புதுச்சேரி திமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து டிவிட்டர் பதிவில் இதுகுறித்து குறிப்பிட்டுள்ளதாவது:

கடைசியில் இந்தி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது; வருந்துகிறோம்.

இந்தி படிப்போரை வெறுக்கமாட்டோம்; திணிப்போரை ரசிக்கமாட்டோம்.

ஒருமைப்பாடு சிறுமைப்படாதிருக்க நாட்டின் பன்மைக் கலாசாரம் பாதுகாக்கப்படவேண்டும்.

சிலர் நுழைக்கப் பார்ப்பது ஊசியில் நூலன்று; ஒட்டகம் - நுழையாது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment