புதுச்சேரி, மே 11- புதுச்சே மாநில காங்கிரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,
ஒன்றிய அரசின் கீழ் இருந்தால் சிகிச்சை உலகத்தரத்தில் கிடைக்கும் என்பதற்காக புதுவையில் ஜிப்மர் மருத்துவமனை தொடங்கப்பட்டது. அதன்படி ஜிப்மரில் தரமான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தது.
அதில் புதுவை மக்களும் பயன் பெற்று வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஜிப்மரில் சிகிச்சைக்குச் செல்லும் புதுவை மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது ஒன்றிய அரசின் ஹிந்தி திணிக்கும் பணியை ஜிப்மர் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் ஜிப்மர் மருத்துவமனை தரமான சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில் இருந்து விலகி ஹிந்தி திணிக்கும் பணியை கையில் எடுத்துக் கொண்டுள்ளது.
மேலும் வரும்காலங்களில் ஜிப்மர் பணிக்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்பதை கட்டாயத்திற்குள்ளாக்கி ஹிந்தி மொழி மாநிலத்தவர்களை மட்டுமே ஜிப்மர் மருத்துவமனையில் கொண்டுவர ஒன்றிய அரசும், ஜிப்மர் நிர்வாகமும் முயற்சித்து வருவதாகத் தெரிகிறது. அவ்வாறு உள்ளூர் மக்களை புறக்கணித்து வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை மட்டும் பணியில் அமர்த்தினால் அது கலவரத்திற்கும், மோதலுக்குமே வழி வகுக்கும்.
எனவே, ஜிப்மர் நிர்வாகம் உடனடியாக எதிர்காலத்தில் அலுவலக மொழியாக ஹிந்தி மற்றுமே என்ற சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும். இல்லையெனில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டங்கள் அனைத்திற்கும் ஜிப்மர் நிர்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டியிருக்கும். குறிப்பாக ஜிப்மர் நிர்வாகத்தில் இருப்பவர்கள் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிப்பதே நமது முதன்மையான நோக்கம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வர வேண்டும்.
-இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment