சென்னை, மே 11 தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படு வதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று (10.5.2022) அறிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 22 நாட்கள் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்றது.
நாள்தோறும் துறை சார்ந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். மேலும், பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டனர். குறிப்பாக, சட்டப்பேரவையின் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை அரசே நியமிக்கும் மசோதா உட்பட 22 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. சட்டப்பேரவையின் நிறைவு நாளான நேற்று (10.5.2022) வரை 20 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையை பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய சட்ட முன்வடிவுகள் அறிமுகம் செய்யப்பட்டது ; மேலும் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

No comments:
Post a Comment