தருமபுர ஆதீனம் பல்லக்குச் சவாரி பிரச்சினை: மனிதனை மனிதன் சுமக்கும் அநாகரிகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

தருமபுர ஆதீனம் பல்லக்குச் சவாரி பிரச்சினை: மனிதனை மனிதன் சுமக்கும் அநாகரிகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்

இதுபோன்ற பிரச்சினைக்குத் தனி ஆணையும் தேவை!

தருமபுர ஆதினத்தின் பண்டார சன்னதி மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் பவனி வருவதற்கு அனுமதி அளித்திருப்பது மனித உரிமைக்கும், நாகரிகத்திற்கும் உகந்ததல்ல - இனியாவது குறைந்தபட்சம் இதுபோன்ற மனித உரிமை மீறலை - அநாகரிகச் செயலை தடை செய்ய பொதுவான ஆணை ஒன்றைத் தமிழ்நாடு அரசு பிறப்பிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

தருமபுர பண்டார சன்னதி பல்லக்கில் செல்லுவது குறித்து 8.5.2022 நாளிட்ட 'விடுதலை'யில் ஓர் அறிக் கையைக் கொடுத்துள்ளோம். 

அதில் குறிப்பிட்டிருந்ததாவது:

‘‘மன்னார்குடி ஜீயர் - அமைச்சர்களையும், எம்.எல்.ஏ.,க்களையும் நடமாட விட முடியாது என்று பகிரங்கமாக சவால் விடுகின்றார் என்றால், இது 1971 ஆம் ஆண்டு ஆத்திக - நாத்திகப் பிரச்சாரத்தின் ‘புதிய அவதாரம்'தானே!'

இதன் பின்னணி, பின்பலம் எங்கே, எந்த நோக்கத்துடன் என்பது மிகவும் ஆராயத்தக்கதும், புரிந்துகொள்ளவேண்டியதும் ஆகும்!

இது முழுக்க மனிதநேய பிரச்சினையின் பாற்பட்டதாகும். தி.மு.க. ஆட்சியின் முற்போக்குக் கொள்கைத் திட்டங்களை மிரட்டிப் பணிய வைத்து முடக்கும் ஒரு காவித் திட்டம்.

இதில் ஓட்டை போட்டுவிட்டால் மற்றபடி மற்ற திட்டங்களில் நாம் வெற்றி அடையலாம் என்பதற்கான ஓர் ஒத்திகை என்பதை தமிழ்நாடு அரசுக்கு குறிப்பாக மரியாதைக்குரிய நமது முதலமைச்சர் அவர்களுக்கு நாம் கனிவுடன், உரிமையுடன் கொள்கை உணர்வு காரணமாக சுட்டிக்காட்டுகிறோம்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்  அன்று சுட்டிக்காட்டியதுபோல், பெரும்பான்மை மக்கள் நலனுக்கும் - சமூகநீதிக்கும் எதிரான வர்கள்தான் இந்த ஆன்மிக போர்வை போர்த்திய ‘நரியர்கள்!'

எனவே, இதுபற்றிய அச்சுறுத்தல்கள், அவ தூறு புழுதிகள்கண்டு பின்வாங்கினால், எந்த ஒரு மாற்றமும், புரட்சிகரமான முன்னெடுப்புத் திட்டங்களும் வரும் நான்கு ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியும், இன்றைய முதலமைச்சர் அவர்களும் செய்யவே இயலாத அளவுக்கு ஆக்கவே இன எதிரிகள் துணிவார்கள்.

‘‘துணிந்த பின் எண்ணுவது என்பது இழுக்கு'' 

நடைமுறைத் திட்டங்களில் மறுபரிசீலனை - ஆட்சிக்கு இவையெல்லாம் சிக்கலை ஏற் படுத்தும்.''

இவ்வாறு 'விடுதலை'யில் (8.5.2022) குறிப்பிட்டு இருந்தோம். ஆனாலும், நடக்கக் கூடாதது - இப்போது நடந்துவிட்டது.

இதனை எதிர்பார்க்கவில்லை.

ஆன்மிகம் என்பதைவிட இதன் பின்னணியில் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். என்ற அரசியல் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

தங்களுக்கான வெற்றி என்று துள்ளிக் குதிப்பார்கள்; மதவெறி காவி சக்திகளும் மகிழ்வார்கள்.

முற்போக்காளர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்கும், மனித உரிமைப் போராளிகளுக்கும் தமிழ்நாடு அரசின் பின்வாங்குதல் - இந்த பல்லக்குப் பிரச்சினையில் ஒரு தோல்வி என்று ஊடகங்கள் சித்தரிக்கக் கூடும். எப் போதுமே சமூகநீதிக்கான, மனித உரிமைப் போராட் டங்கள் உடனடியாக வெற்றியை தந்ததாக வரலாறு இல்லாவிட்டாலும், இறுதியில் சிரிப்பவர்கள் பகுத்தறி வாளர்களாகத்தான் இருப்பார்கள் என்பதற்கு வரலாற்றில் எத்தனையோ நிகழ்வுகள் உண்டு.

அது ஒரு புறமிருக்கட்டும். நமக்குள்ள ஆதங்கம் எல்லாம், தி.மு.க. ஆட்சிக்கு இப்படி ஒரு பின்னடைவை - களங்கத்தை - இந்தத் தடுமாற்ற முடிவு உருவாக்கி விட்டதே என்பதுதான்!

தி.மு.க. ஆட்சி என்ற ''வாராது வந்த மாமணி''யான ஆட்சியின் சாதனைகளும், புகழும் என்றும் ''ஆயிரங் காலத்துப் பயிராக'' அமைய வேண்டும் என்பதில் நம்மைவிட அதிக அக்கறை உள்ளவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது.

எனவேதான் கொள்கைச் சறுக்கல்களோ, வழுவல் களோ நடந்துவிடக் கூடாது என்பதில் நமது பார்வையும், கவலையும், பொறுப்பும் அரசியலுக்கு அப்பாற்பட்ட இனமானப் பிரச்சினையாகும்!

மக்களாட்சியில் சில முடிவுகளை ஆட்சியாளர்கள் மறுபரிசீலனை செய்வது தவிர்க்க இயலாததுதான். ஆனால், அப்படிப்பட்ட மறுபரிசீலனைகள் அடிப்படை மனித உரிமைகளையும், சமத்துவ நெறிகளையும் பாதிப்பதாக அமைந்து விடக் கூடாது.

மதுரை ஆதின கர்த்தர் என்னைக் கேலி செய்வதாக நினைத்து, பல்லக்கை மனிதர்கள் சுமப்பது அநாகரிகம்; மனித உரிமை பறிப்புக் கூடாது என்கிற அத்துணை முற்போக்கான தலைவர்களை, சிந்தனையாளர்களை கேலி செய்துள்ளார்.

‘‘உலகம் முழுவதும் இது விளம்பரப்படுத்தப்பட்டதாம்'' என்றும் கூறுகிறார். உலகம் முழுவதும் அந்த அநாகரிக மான, மனிதனை மனிதன் தூக்கி சுமப்பதைக் கண்டு இப்படி இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பழைய மனித அநாகரிகங்களா? என்றுதான் முகம் சுளிப்பார்கள் - சிரிப்பார்கள் என்பதை பக்குவமடையாத பண்டார சன்னியாசி  புரிந்துகொள்ள சக்தியற்ற பரிதாபத்திற் குரியவர் ஆவார்!

மனிதர்களை தூக்கிச் சுமப்பதற்கு ஒரு விசித்திரமான புதிய வாதம் - முன் வைக்கப்படுகிறது!

தூக்குபவர்களே விரும்பி வந்துதான் தூக்கிச் சுமக்க முன் வருகிறார்களாம்! - இது அறிவுபூர்வமாகவோ, சட்டபூர்வமாகவோ ஏற்கத்தக்கதா?

கைரிக்ஷாவை இழுத்தவர்கள் அவர்களாகவே விரும்பித்தான் இழுக்கிறோம் என்று கூறி, இன்று இழுத்தால் சட்டம் அனுமதிக்குமா?

கருணைக் கொலை செய்ய, முற்றிய நோயினால் அவதியுறுகிறார்கள் - வலியும், வேதனையும் தாங்க முடியாத நிலை அவர்களுக்கு, ஆகவே, அதைச் செய்கிறோம் என்று எந்த டாக்டராவது சொன்னால் அனுமதிப்பார்களா?

 குறிப்பிட்ட மாதங்களைத் தாண்டிய கருவை அதனைச் சுமப்பவர்கள் விரும்பி, தானே கருவை அழித்துக் கொள்ள விரும்புகிறார்கள் - அனுமதிக் கலாமா?

பெண் குழந்தைகளை கள்ளிப்பால் தந்து குடும் பத்தினர், ஏன் தாயுமே அழிக்க முன் வந்தால், சட்டமும் - அரசும் அனுமதிக்குமா?

மனித உரிமை மலிவான விலைச் சரக்கா?

இந்த அரசு சிலரைத் ‘திருப்தி' செய்வதற்காக  அளவுக்கு அதிகமாக ‘ஆன்மிகம்', 'ஆன்மிகம்' என்று ‘தம்பட்டம்' அடிக்கவேண்டுமா?

தந்தை பெரியார் சொன்ன ஒரு பழமொழிதான் நமக்கு இப்போது நினைவுக்கு வருகிறது.

‘‘மாமிசம் சாப்பிடுகிறவன் என்பதற்காக, நான் எலும்புத் துண்டைக் கழுத்தில் போட்டுக் கொண்டு அலைய வேண்டுமா?'' என்பதுதான் அது.

தருமபுர ஆதினகர்த்தரின் பல்லக்குச் சவாரி அனுமதி இதுவே கடைசியாகவும் இருக்கவேண்டும் - பொதுவான ஆணை பிறப்பிப்பது சரியானதாக இருக்கும்.

எனவே, அடிப்படையில் பெரியார், அண்ணா, கலைஞர் வழியே பாதுகாப்பான நிரந்தர வழி!

எதிர்ப்பை உரமாக்கி எழுவதுதான் வெற்றி உலா வுக்கு நிரந்தர வெளிச்சம் என்பதை, உங்களுக்காக என்றும் ஓர் இராணுவக் கட்டுப்பாடுடன் பாடுபடும், பாதுகாக்கும் ஒரு போராளி என்ற உரிமையுடன் மானமிகு முதலமைச்சருக்கும், மற்ற அமைச்சரவை யினருக்கும் வேதனையுடன் தெரிவித்தும், நாளையும் அதே பாதையில் எங்கள் பணி - எந்த நிலைப்பாட்டிலும் விட்டுக் கொடுக்காமல் தொடரும் என்று பெரியார் வழித் தொண்டன் உறுதி கூறி முடிக்கின்றேன்.

மானம் பாராத எம் பணி என்றும் திசை தடுமாறாமல் தொடரும்! தொடரும்!!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

10.5.2022


No comments:

Post a Comment