ஆந்திரா-ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் "அசானி" தீவிர புயல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 11, 2022

ஆந்திரா-ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் "அசானி" தீவிர புயல்

சென்னை, மே 11 ஆந்திரா-ஒடிசா கடற்கரையை நோக்கி அசானி தீவிர புயல் நகருகிறது என்றும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான அசானி தீவிர புயல், வங்கக்கடல் பகுதியில் இருந்து வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, வடக்கு ஆந்திரா கடற்கரையையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று இரவு நிலவியது.

இது வடக்கு-வடகிழக்கு திசையில் வடக்கு ஆந்திரா-ஒடிசா கடற்கரையையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என்றும், அதனைத்தொடர்ந்து இன்றோ (புதன்கிழமை) அல்லது நாளையோ (வியாழக்கிழமை) புயலாக வலு இழக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் இன்று முதல் 14ஆம் தேதி (சனிக்கிழமை) வரையிலான 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், கடந்த 2 தினங்களாக இந்த அசானி புயல் காரணமாக ஏற்பட்டுள்ள வானிலை மாற்றங்களாலும், பல இடங்களில் நிலவும் மேக கூட்டங்களினாலும் தமிழ்நாட்டில் வெப்பம் குறைந்து இருக்கிறது. இதில் அதிகபட்சமாக திருத்தணியில் 4 டிகிரி வரை வெப்பம் தணிந்து இருப்பதாக வானிலை ஆய்வு மய்யத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். அடுத்து வரும் நாட்களுக்கான வெப்பநிலை குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்த புயல் கடந்து சென்ற பிறகு, வடமேற்கு திசையில் இருந்து வரும் காற்றை பொறுத்துதான் அடுத்ததாக தமிழ்நாட்டிற்கு வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும்? என்று கூறமுடியும். அதை பொறுத்திருந்து பார்க்கலாம்' என்றார்.

No comments:

Post a Comment