சென்னை, ஜூன் 6 தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருப்பது நீர்வளத்துறை நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை நன்கு பெய்ததால் மாநிலம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. இதனால், குடிநீர், பாசனம் மற்றும் இதர தேவைகளை பூர்த்தி செய்வதில் நிலத்தடி நீர் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த நிலையில், கோடைகாலத்திலும் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாகவும், நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ் நிலத்தடி நீரை உயர்த்த தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கை காரணமாகவும், மேலும் கடந்த காலங்களை போன்று அல்லாமல் வணிக ரீதியாக நிலத்தடி நீர் உறிஞ்சுவது தடுக்கப்பட்டதன் காரணமாக கடந்த சில மாதங்களாக நிலத்தடி நீர்மட்டம் குறையவில்லை என்பது சமீபத்தில் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மய்யம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் ஆய்வு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்பட்ட நீர் அளவு, நீர்வள ஆதாரத்துறை மூலம் கணக்கிடப்பட்டது.
இவ்வாறு கடந்த மாதம் நீர்வள ஆதார விவர குறிப்பு மய்யம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்தாண்டு மே மாதத்தை ஒப்பிடுகையில் தமிழ்நாடு முழுவதும் திருவள்ளூர், திருவண் ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ண கிரி, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விரு துநகர், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, தென்காசி, ராணிப்பேட்டை, திருப் பத்தூர் ஆகிய 31 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், காஞ்சிபுரம், நாகப் பட்டினம், அரியலூர், சிவகங்கை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த சூழ்நிலையில், மாநிலம் முழுவதும் நிலத்தடி நீர் பயன்பாடு குறித்து தினசரி ஆய்வு செய்யவும் நீர்வள ஆதார விவரக் குறிப்பு மய்ய அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment