இலக்கிய நூலில் உள்ள 99 பூக்களின் பெயர்களை கூறி கலாம் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுமி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 7, 2022

இலக்கிய நூலில் உள்ள 99 பூக்களின் பெயர்களை கூறி கலாம் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுமி

காஞ்சிபுரம், ஜூன் 7  தமிழ் இலக்கிய நூலான குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 பூக்களின் பெயர்களையும், 110 அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களையும் குறைந்த நேரத்தில் கூறி கலாம் சாதனை புத்தகத்தில் காஞ்சிபுரம் சிறுமி இடம் பிடித்து  சாதனை படைத்துள்ளார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி - மாலதி தம்பதி. இவர்களுக்கு, கனிஷ்கா என்ற 4 வயது மகள் உள்ளார். மூர்த்தி, சிறீபெரும்புதூரில் உள்ள தனியார் கார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும்நிலையில் காஞ்சிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

கடந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக சிறுமி கனிஷ்கா எல்கேஜி வகுப்பில் சேர்க்கப்பட்டு இணையம் மூலம் படித்து வந்தார். இணைய வகுப்பில் படித்து வந்தநிலையில் சிறுமியின் ஞாபகத்திறனை பார்த்த பெற்றோர், தங்களது மகளை ஏதாவது சாதனை செய்ய பழக வேண்டும் என நினைத்து முயற்சி செய்தனர்.

அதன்படி, தமிழ் இலக்கிய நூலான குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 பூக்களின் பெயர்களையும், 110 அறிவியல் கண்டுபிடிப்புகளையும், கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களையும் வாசிக்க வைத்து பயிற்சி அளித்தனர். சிறுமி கனிஷ்காவும் நன்கு பயிற்சி பெற்றார். தற்பொழுது, 99 பூக்களின் பெயர்களையும் 52 நொடிகளிலும், 110 கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களையும் 3 நிமிடம் 3 நொடிகளில் குறைந்த கால நேரத்தில் சொல்லி சாதித்து கலாம் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.கலாம் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிறுமியின் செயலை அறிந்து, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, சிறுமி கனிஷ்காவை நேரில் வரவழைத்து  பாராட்டினார். சின்ன வயதில் அறிவுத்திறன் பெற்ற சிறுமி கலாம் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த சிறுமியையும், சாதனை புரிய ஊக்குவித்த பெற்றோரையும் அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டினர்.


No comments:

Post a Comment