ராமநாதபுரம், ஜூலை 15 தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துகளில் தினசரி 41 பேர் உயிரிழக்கின்றனர் என நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ராமநாதபுரத்தில் தெரிவித்தார்.
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் நேற்று (14.7.2022) நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு பொதுப்பணிகள், நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்து பேசியது: ''தமிழ்நாட்டில் 2 சதவீதம் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 30 சதவீதம் விபத்துகள் நடக்கின்றன. மூன்று சதவீதம் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் 33 சதவீதம் விபத்துகள் நடக்கின்றன.
இவற்றை கட்டுப்படுத்த நெடுஞ்சாலை, போக்குவரத்துத் துறை, காவல், சுகாதாரம், கல்வி ஆகிய 5 துறைகள் உள்ளடக்கி செயல்படுகின்றன. விபத்துகள் மூலம் தினசரி இந்தியாவில் 410 உயிரிழப்புகளும், தமிழ்நாட்டில் 41 உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் கிராமப்புற சாலைகளிலிருந்து வரு வோர் தான் அதிக விபத்துகளை ஏற்படுத்துகின்றனர்.
இதைக் கட்டுப்படுத்த வேகத் தடைகள் அமைக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் இருசக்கர வாகன பயன்பாடு 42 சதவீதமும், நான்கு சக்கர வாகன பயன்பாடு 17 சதவீதமும், கனரக வாகன பயன்பாடும் 14 சதவீதமும் உள்ளது. இதில் இருசக்கர வாகன விபத்துக்களே அதிகம் நடக்கின்றன.
'நம்மை காக்கும் 48 மணி நேரம்' திட்டத்தில் விபத்து சிகிச்சை அளிக்க 659 தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இதுவரை 83512 விபத்துகளில் தமிழ்நாடு அரசு ரூ. 75.81 கோடி செலவழித்து 83512 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது. விபத்தை அதிகளவில் குறைத்து முதலிடம் பெறும் மாவட்டத்திற்கு ரூ. 25 லட்ச மும், 2-ஆம் இடம் பெறும் மாவட்டத் திற்கு ரூ. 13 லட்சமும், 3-ஆம் இடம் பெறும் மாவட்டத்திற்கு ரூ.10 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாடத்திட்டத்தில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடம் வைக்கப்பட் டுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலை நான்கு வழிச்சாலைக்காக ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு முதல் கட்டமாக சென்னை முதல் பாண்டிச் சேரி வரை பணி நடந்து வருகிறது. 2-ஆம் கட்டமாக நாகபட்டினம் வரை, 3-ஆம் கட்டமாக ராமநாதபுரம் வரை, 4-ஆம் கட்டமாக தூத்துக்குடி வரை, 5-ஆம் கட்டமாக கன்னியாகுமரி வரை சாலை அமைக்கப்பட உள்ளது என்றார்.

No comments:
Post a Comment