மின்வாரியம் சாதனை: 9.59 லட்சம் பணிகள் சீரமைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 26, 2022

மின்வாரியம் சாதனை: 9.59 லட்சம் பணிகள் சீரமைப்பு

சென்னை, ஜூலை 26  பொதுமக்களுக்கு சீரான மின் விநியோகம் வழங்கும் வகையில் துணை மின்நிலைய பராமரிப்பு பணி, மரக்கிளைகள் அகற்றுதல் உள்ளிட்ட 9.59 லட்சம் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு என்று திட்டமிட்டதை விட கூடுதல் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது என மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் வீட்டு மின்இணைப் புகள் - 2.33 கோடி; வணிக மின் இணைப்புகள் - 36 லட்சம்; தொழிற்சாலை மின்இணைப்புகள் - 7 லட்சம்; விவசாய மின்இணைப்புகள் - 22 லட்சம்; குடிசை மின்இணைப்புகள் - 9 லட்சம்; இதர இனம் - 14 லட்சம் என மொத்தம் 3.24 கோடிக்கும் அதிகமான மின்இணைப்பு கள் உள்ளன. இவற்றுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்கி வருகிறது.

இதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அனல் மின் உற்பத்தி நிலையங்கள் - 4,320 மெகாவாட்; எரிவாயு மின் உற்பத்தி நிலையங்கள் - 516 மெகா வாட்; காற்றாலை மின் உற்பத்தி நிலை யங்கள் - 8,615 மெகாவாட்; சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் - 5,303 மெகாவாட் என்ற அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மத்திய தொகுப்பில் இருந்தும் மின்சாரம் பெறப்படுகிறது. மேலும் மின்சாரம் அதிகமாக தேவைப்படும் பட்சத்தில் தனியாரிடம் இருந்தும் கொள்முதல் செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் மின்வழங்கல் அதிகமான இடங்களில் மின்வாரியம் கம்பங்களின் மூலமாவே வழங்கி வருகிறது. இயற்கை சீற்றங்களில் எளிதாக இவை சிக்கி கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்த பாதிப்பானது தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அதிகமாக இருக்கிறது. இங்கு மற்ற இடங்களை விட புயலின் தாக்கம் அதிகமாக இருப்பதே காரணம்.

குறிப்பாக கடந்த 2008ஆம் ஆண்டு வீசிய ‘நிஷா’ புயல்; 2010ஆம் ஆண்டு வீசிய ‘ஜல்’ புயல், 2011ஆம் ஆண்டு வீசிய ‘தானே’ புயல்; 2012ஆம் ஆண்டு வீசிய ‘நீலம்’ புயல்; 2016ஆம் ஆண்டு வீசிய ‘வர்தா’ புயல்; 2017ஆம் ஆண்டு வீசிய ‘ஒக்கி’ புயல்; 2018ம் ஆண்டு வீசிய ‘கஜா’ புயல்; 2020ஆம் ஆண்டு வீசிய ‘நிவர்’ புயல்களால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேருடன் பெயர்ந்து விழுந்தது. இதனால் ஏராளமான மின்கம்பங்கள் சாயந்தன. முற்றிலும் மின்விநியோகம் தடைபட்டது.  

பருவமழை தொடங்குவதற்கு குறுகிய காலமே இருக்கும் நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் தீவிர பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. பொது மக்களுக்கு சீரான மின் விநியோகம் வழங்கும் வகையில் துணை மின்நிலைய  பராமரிப்பு பணி, மரக்கிளைகள் அகற் றுதல் உள்ளிட்ட 9.59 லட்சம் பணிகள் நிறைவு  செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் சீரான மின்விநியோகம் வழங்கும் வகையில் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். 

அதன்படி துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணி - 1,845; மரக்கிளைகள் அகற்றம் - 5,45,269; பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றம் - 30,830; சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சரிசெய்தல் - 25,959 என மொத்தமாக 9,59,046 பராமரிப்பு பணிகள் தமிழ்நாடு முழுவதும் ஒரு மாதத்தில் செய்யப் பட்டுள்ளது.  இதன் மூலம் பொது மக்களுக்கு சீரான மின் விநியோகம் கிடைக்கும். மேலும் மழைக் காலங்களில் பாதிப்பு ஏற்படுவதும் குறையும். தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆய்வு  செய்து வருகிறோம். தேவைப்படும் இடங்களில் புதிய மின் கம்பங்கள், கம்பிகள், பெட்டிகள் உள்ளிட்ட அனைத்தும் மழை தொடங்குவதற்கு முன்பு மாற்றப்படும்’ என்றார்.

No comments:

Post a Comment