ஒன்றிய பா.ஜ.க. அரசை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகள் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 22, 2022

ஒன்றிய பா.ஜ.க. அரசை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகள் போராட்டம்

புதுடில்லி, ஜூலை 22- புலனாய்வு அமைப்புகளை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக பயன் படுத்தும் ஒன்றிய அரசுக்கு எதிர்க் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மக்கள் விரோத, விவசாயிகள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து போராட்டங்களை தீவிரப்படுத்தவும் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களைப் பாதிக்கும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒன்றிய அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது. இதையடுத்து, அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க எதிர்க்கட்சி களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூனா கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தி.மு.க. சார்பில் மக்களவை தி.மு.க. குழு துணைத் தலைவர் கனிமொழி கலந்துகொண்டார். 

தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், புலனாய்வு அமைப்புகளை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை களுக்காக பயன்படுத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

இதுவரை இல்லாத வகையில் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களை குறி வைத்து புலனாய்வு அமைப்புகள் மூலம் ஒன்றிய அரசு துன்புறுத்தி வருவ தாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. ஒன்றிய அரசின் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து போராட்டத்தை தீவிரப் படுத்தவும் எதிர்க்கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment