'மோட்டார் சைக்கிள்' சாகசத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு நூதன தண்டனை வழங்கிய உயர்நீதிமன்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 5, 2022

'மோட்டார் சைக்கிள்' சாகசத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு நூதன தண்டனை வழங்கிய உயர்நீதிமன்றம்

சென்னை, அக்.5 உயர்நீதிமன்றம் வழங்கிய நூதன தண்டனையை ஏற்று சென்னை அண்ணா சாலையில் இளைஞர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

‘இனி மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட மாட்டேன்’ என்ற வாசகம் அடங்கிய பதாகையை கையில் ஏந்தி நின்றார். 

சென்னை தேனாம்பேட்டை- அண்ணாசாலையில் கடந்த மாதம் 7-ஆம் தேதி அன்று மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி சென்று சாகசத்தில் ஈடுபட்ட வழக்கில் 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அய்தராபாத்தை சேர்ந்த கோட்லா அலெக்ஸ் பினாய் (வயது 22) என்ற 'யூடியூபர்' பிரபலத்தை காவல்துறையினர் தேடி வந்தனர். அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் பிணை மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் பிணை வழங்கிய நிலையில், 'அந்த இளைஞர் எங்கு மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டாரோ, அதே இடத்தில் 3 வாரங்கள் திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் போக்குவரத்து விழிப்புணர்வில் ஈடுபட வேண்டும். மற்ற நாட்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவில் வார்டு பாய்க்கு உதவியாக இருக்க வேண்டும்' என்று நிபந்தனையும் விதித்தார்.

அதன்படி இளைஞர் கோட்லா அலெக்ஸ் பினாய் நேற்றுமுன்தினம் (3.10.2022)  காலை மற்றும் மாலை வேளையில் அண்ணாசாலை-தேனாம்பேட்டை சந்திப்பில், 'சாலை விதிகளை கடைப்பிடிப்போம். சாலை விதிகளை மதிப்போம். விபத்துகளை தவிர்ப்போம்' என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 'இரு சக்கர வாகனத்தை கொண்டு சாலையில் சாகசங்கள் எதுவும் செய்ய மாட்டேன்' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியபடி நின்றார். மேலும் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டக்கூடாது. குடிபோதையில் வாகனங்களை இயக்கக்கூடாது. தலைக்கவசம் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களையும் வாகன ஓட்டிகளிடம் விநியோகம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், 'இனி நான் எங்கேயும் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட மாட்டேன்' என்று உறுதியுடன் கூறினார். நீதிபதி வழங்கி உள்ள இந்த தீர்ப்பு பைக் ரேஸ் பிரியர்களை கதிகலங்க வைத்துள்ளது.


No comments:

Post a Comment