சென்னை, அக்.10 "அப்பா இல்லாத இடத்தில் அண்ணா _ நான் உங்களை வைத்து பார்க்கிறேன்" என்று பொதுக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உருக்கமாகப் பேசினார்.
சென்னையில் நடந்த திமுக பொதுக்குழுவில் திமுக துணை பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியதாவது:
திமுகவில் வெற்றிடம் உருவாகி விடும் என்று பல பேர் சொன்னார்கள். நமது கொள்கைக்கு எதிராக ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால், அந்த சாம்ராஜ்யங்களை எல்லாம் தகர்த்து எறியக்கூடிய வகையில் அந்த வெற்றிடத்தை காற்றாக இல்லாமல், ஆழிப் பேரலையாக அவர்களை அழிக்கக்கூடிய ஒருவராக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து நின்று காட்டினார்.
அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்த இயக்கத்தை வெற்றி பாதையில் அழைத்தும் சென்று கொண்டிருக்கிறார். அரசியல் வெற்றிப் என்பது மட்டுமல்ல, தொடர்ந்து எந்த இடத்திலும் நமது கொள்கைகளை விட்டு கொடுக்காமல், அது புதிய கல்வி கொள்கையாக இருக்கட்டும். இங்கே இருக்கும் சனாதன சக்திகள் உங்களுக்கு ஏன் கல்வி, உங்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், அந்த பெண்களை மீண்டும் சமையல் அறைக்குள்ளே அடைக்க வேண்டும் என்று, அவர்கள் திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள்.
தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னால் இன்று இருக்கக்கூடிய போராட்டம் என்பது வெறும் அரசியல் வெற்றிக்கான போராட்டம் இல்லை. இது நமது கொள்கைகளுக்கான போராட்டம். நமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான போராட்டம். சுயமரியாதைக்கான போராட்டம். அந்த போராட்டத்தில் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் போராட கூடிய வாய்ப்பை எனக்கு அளித்ததற்கு அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
நாடு முழுவதும் உங்கள் வழிநடத்தலை அது எதிர்நோக்குகிறது. அண்ணா, அப்பா இல்லாத இடத்திலே நான் உங்களை வைத்து பார்க்கிறேன். உங்கள் வழியிலே நீங்கள் எடுத்து வைக்கக்கூடிய அடிகளில், தேர்ந்தெடுக்கக்கூடிய போராட்டங்கள் அத்தனையிலும் உங்கள் பின்னால் அணி வகுக்கத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:
Post a Comment