கவிஞர் நந்தலாலாவின் 'ஊறும் வரலாறு' தகவல் களஞ்சியம் - இலக்கிய பேழை ஆசிரியர் பாராட்டு
பெரியார் மண் என்பதற்கு அடையாளம் தமிழ்நாட்டில் ஆட்சிகள் மாறினாலும்
பெரியார் கொள்கைகளே சட்டங்கள் ஆகின்றன
திருச்சி, அக்.8 திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 144 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் புத்தகங்கள் அறிமுக விழா 6.10.2022 அன்று மாலை 6.30 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசா அரங்கத்தில் நடைபெற்றது. பேராசிரியர் திலகவதி வரவேற்புரையாற்றினார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் மலர்மன்னன் தலைமை தாங்கினார். மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், பேராசிரியர் சுப்பிரமணியன், பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் செந்தாமரை, சு.இளங்கோவன், பகுத்தறிவாளர் கழக மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புத்தகங்கள் அறிமுகம்
'எங்கள் பேராயுதம் பெரியார்' என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்கள் குடந்தை தனிஎழிலன், கோவிதா ஆகியோர் உரையாற்றினர்.
சே.மெ.மதிவதனி
மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி "விழுப்புண்களை ஏற்ற விடுதலையின் வீர வரலாறு" , "சுயமரியாதை இயக்கம் நீதிக்கட்சி பொதுவு டைமை இயக்கம் பெரியாரின் விளக்கமும் இன்றைய தொடர்ச்சியும்" ஆகிய நூல்களை அறிமுகம் செய்து உரையாற்றினார்.
அவரது உரையில், பெரியார் எந்த வகையில் எல்லாம் இந்த சமூகத்தின் இழிநிலையை எதிர்த்து போராடினார் என்பதையும், யாரையும் துணைக்கு அழைக்காமல் கொண்ட கொள்கையில் காரிய வீரராக திகழ்ந்தார் என்பதையெல்லாம் சான்றுகளுடன் விளக்கி, அதற்கு பெரியாரின் போர் கருவியாக பயன்பட்டது 'விடுதலை' நாளிதழ் என்றார். 'விடுதலை' சந்தித்த சவால்கள், 'விடுதலை'யால் பெற்ற விடுதலை ஆகியவற்றை விளக்கி இரு நூல்களையும் அறிமுகம் செய்து, தந்தை பெரியார் நமக்கு அளித்த விடுதலை எனும் ஆயுதத்தை பரப்பி, அவரால் நமக்கு அடையாளப் படுத்தப்பட்டு நம்மை வழிநடத்தும் தமிழர் தலைவர் தலைமையில் அணிவகுப்போம் என்றார்.
கவிஞர் நந்தலாலா
கவிஞர் நந்தலாலா தமது உரையில், 'ஊறும் வரலாறு' என்ற புத்தகத்தை எழுதும் போது மிகவும் சிரமப்பட்டுத் தகவல்களை, வரலாற்றினை பிழையின்றி தர வேண்டும் என்பதிலே கவனம் கொண்டேன்.
ஆவணங்களைச் சரி பார்த்தேன். இந்த நூலை எழுதி முடித்தேன்.
இதிலே நான் மிகவும் சிரமப்படாமல் எழுதிய கட்டுரை என்றால் 'துறவியின் இல்லம் பெரியார் மாளிகை' என்ற கட்டுரை தான்.
எழுதுவதற்கு முன் ஆசிரியர் அய்யாவை சந்திக்க வேண்டும் என்று பேராசிரியர் சுப்பிரமணியம் அவர்களிடம் விருப்பத்தைத் தெரிவித்தேன்.
அவரும் உடனே சந்திப்புக்கான நேரத்தை வழங்கினார். பெரியார் மாளிகை குறித்து ஆசிரியரிடம் கேட்டவுடன் மடை திறந்த வெள்ளமென தகவல்களைக் கொட்டிக் குவித்தார்.
எந்த ஆண்டு வாங்கப்பட்டது? யாரிடமிருந்து வாங் கினார்? தொகை எவ்வளவு? அண்ணா எப்போதெல்லாம் வந்திருக்கிறார்? எல்லாவற்றையும் விளக்கமாக எடுத்துக் கூறினார். பத்திரம் கிடைக்குமா? என்று கேட்டேன்.மற்றவர்கள் கொடுக்க மாட்டார்கள். ஆனால் தலைவர் அவர்களோ உடனே பத்திரத்தை கொடுப்பதற்கு ஏற்பாடு செய்தார். யாருக்கு வரும் இந்த மனம் ? தந்தை பெரியாருடன் நான் பயணித்ததில்லை.
ஆனால் இன்று ஆசிரியருடன் வாகனத்தில் பயணிக் கின்ற வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருகிறேன்.
என்னுடைய புத்தகத்தைத் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பணம் கொடுத்து வாங்கினார்.
அந்த நூலினை ஆசிரியர் உடனே படித்துவிட்டு அக்டோபர் நான்காம் தேதி விடுதலை இதழில் ' கவிஞர் நந்தலாலாவின் கவினுறு படைப்பு ' என்று எழுதியதை என்னால் மறக்கவே முடியாது.
புத்தகம் வெளியீட்டு விழா என்றால் எல்லோரும் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு போட்டோ எடுத்து கொள்ளுவார்கள். ஆனால் திராவிடர் கழக நிகழ்ச்சியில் மட்டும் மேடையிலே வரிசை வரிசையாக பணம் கொடுத்து புத்தகங்களைப் பெறும் காட்சியைப் பார்க்கிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்; நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.
பேராசிரியர் நம்.சீனிவாசன்
பேராசிரியர் நம்.சீனிவாசன் தமது உரையில்,
தந்தை பெரியாரின் 144 ஆம் ஆண்டு பிறந்தநாள் மலரைப் பற்றி உரையாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
1956 ஆம் ஆண்டு பெரியார் பிறந்த நாள் முதல் மலர் வெளிவந்தது. அதன் பிறகு 1962 தொடங்கி இன்று வரைக்கும் 60 மலர்களை ஆசிரியர் அய்யா அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஆசிரியருடைய பெரியார் பிறந்தநாள் அறிக்கை செறிவானது. அந்தக் கட்டுரையினை மூன்று பிரிவாக பிரிக்கலாம். முதலாவதாக பிறந்தநாள் மலர் வெளிவரும் வரலாறு.
இரண்டாவதாக கொள்கை முழக்கம். மூன்றாவது பகுதியாக திட்டங்கள் என்று ஆசிரியருடைய கட்டுரையை வகுத்துக் கொள்ளலாம். ஆண்டு திட்டத்தில் அய்ந்து திட்டங்களை ஆசிரியர் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
நீதிமன்றங்களில் சமூகநீதி , தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு, மாநில அரசை செயல்பட அனுமதித்தல், திராவிட மாடலை நிலை நாட்டல், அய்யாவின் கொள்கைகளை பரப்புதல் . ஆண்டு திட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒன்று பயிற்சி வகுப்பு நடத்துதல். பேச்சாளர்களுக்கு, எழுத்தாளர்க ளுக்கு, எழுத்தாளர்களுக்கு, களப்பணியாளர்களுக்கு என்று வகுத்திருக்கிறார்கள். இயக்கம் செய்த சாதனைகளைப் பட்டியலிட்ட பிறகு பெரியார் விஷன் ஓடிடி பற்றிக் குறிப்பிடுகிறார்.
சிறுகனூர் பெரியார் உலகப் பணிகளை விளக்குகிறார். ஆண்டு மலரில் இடம் பெற்றிருக்கின்ற ஆசிரியரின் சுற்றுப்பயணம் வியக்க வைக்கிறது. 90 வயதில் 95 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். 26 காணொலி கூட்டங்களில் பேசியிருக்கிறார் . இந்த ஓராண்டில் அவர் எழுதிய அறிக்கைகளின் எண்ணிக்கை 213. கழகப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு இதுவரை 5263 அறிக்கைகளை எழுதி இருக்கிறார் என்ற தகவலை நூலகர் கோவிந்தன் தெரிவித்திருக்கிறார். மலரில் இடம் பெற்றிருக்கக் கூடிய சுவையான பகுதி - தந்தை பெரியாருடைய சிலை திறப்பு விழாவில் கலைஞர் நிகழ்த்திய உரை. பெரியாருக்குப் பெருமை சேர்ப்பதாகவும் இருக்கிறது; பகுத்தறிவுப் பிரச்சாரமாகவும் இருக்கிறது . ஒரு பக்க உரை வாசகர்கள் படித்து சுவைக்க வேண்டிய கட்டுரையாகும்.
மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிக அற்புத மான ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார். தமிழ்நாட்டில் ஆட்சிகள் மாறிக் கொண்டிருந்தாலும் தந்தை பெரியாரின் கொள்கைகளே சட்டங்கள் ஆகின்றன என்பதைப் பதிவு செய்திருக்கிறார். தமிழ்நாடு அரசின் மாநில வளர்ச்சிக் கொள்கை குழுத்துணை தலைவர் டாக்டர் ஜெ .ஜெயரஞ்சன் தமிழ்நாட்டில் பொருளாதாரம் வலுவாக இருப்பதை புள்ளி விவரத்துடன் எடுத்துச் சொல்லி சமூக ஜனநாயகத்தின் கர்த்தாவாக தந்தை பெரியார் திகழ்ந்ததால் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார். பேராசிரியர் மு .நாகநாதன் அவர்களின் கட்டுரை அரிய செய்திகளை நமக்கு வழங்குகிறது.
திராவிட மாடல் உயர்கல்வியில், திராவிட மாடல் மருத்துவ கட்டமைப்பில், திராவிட மாடல் பொறியியல் கல்வியில், இந்த மூன்று கட்டுரைகளையும் வெளிநாட்டு அறிஞர்கள் எழுதி இருக்கிறார்கள். ஸ்காட்லாந்து நாட்டை சார்ந்த சுதாகர் பிச்சை முத்து, ஓமன் நாட்டை சார்ந்த டாக்டர் சென் பாலன், ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த கபிலன் காமராஜ் இவர்கள் எழுதிய கட்டுரைகளை வாசகர்கள் கவனத்துடன் படித்து திராவிட மாடலின் பெருமையை அறிதல் வேண்டும் . இந்த மலரைப்பற்றி சொல்வதென்றால் ஆசிரியர் அவர்களின் வாசகத்தில் குறிப்பிடலாம் திராவிடர் இயக்க வரலாற்றை அதன் எழுச்சியை மாட்சியை சாட்சியங்களுடன் சொல்லும் மலர் இது. இதை வெற்றிச் சரித்திரம் எனலாம் . திராவிடத்தின் செப்பேடு; சிலாசனம் ; கல்வெட்டு என்று வியக்கலாம். என்று உரையாற்றினார்
புத்தகங்கள் வெளியிடு
தந்தை பெரியார் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் - “விடுதலை” மலர் 2022, சமூகநீதி நாள் - செப்டம்பர் 17, 21 மொழிகளில் தந்தை பெரியார் - கி.வீரமணி, விழுப்புண்களை ஏற்ற ‘விடுதலை’ வீர வரலாறு - கி.வீரமணி, 'சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி', பொதுவுடைமை இயக்கம் - கி.வீரமணி, இந்து அறநிலையத்துறையை ஒழித்து கோயில்களின் நிருவாகத்தை பார்ப்பனர்கள் கைப்பற்றத் துடிப்பதேன்? - கி.வீரமணி, தமிழின மொழியினக் காவலர் வீரமணி - ப,திருமாவேலன் மற்றும் கவிஞர் நந்தலாலா எழுதிய 'ஊறும் வரலாறும்' ஆகிய புத்தகங்களை திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டு சிறப்புரை யாற்றினார். 'ஊறும் வரலாறு' என்ற நூலை உருவாக்கிய கவிஞர் நந்தலாலாவிற்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டுக்களை தெரிவித்தார்.
கலந்து கொண்டவர்கள்
திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், கணினி பயிற்சி மய்ய உரிமையாளர் பன்னீர்செல்வம், மண்டல தலைவர் ஆல்பர்ட் மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், பன்னீர்செல்வம், மகளிர் பாசறை தலைவர் அம்பிகா, செயலாளர் சங்கீதா, திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் இரா.தமிழ்சுடர், தமிழ்மணி, பெல் ஆறுமுகம், பெல்.ஆண்டிராஜ், லால்குடி மாவட்ட செயலாளர் அங்கமுத்து மற்றும் தமிழ் ஆர்வலர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், கழகத் தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். நிறைவாக ப.க.ஜோ.பென்னி நன்றி கூறினார்.


No comments:
Post a Comment