திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கல்

சென்னை, அக்.22 திருக்குறள் 140 மொழிகளுக்கும் மேல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 2053 ஆண்டு களுக்கு முன்னால் இயற்றப்பட்ட ஒரு நூல், இன்றளவும் நாடாளுமன்றத்தில்கூட மேற்கோள் காட்டப்படுகின்ற அளவிற்கு உயர்வைப் பெற்றிருக்கிறது.

இப்படிப்பட்ட நூலை மாணவர்கள் கற்றால் மட்டும் போதாது. அதன் வழியில் நடக்கவும் வேண்டும் என தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ந. அருள் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளை சிறீராம் இலக்கியக் கழகம் சார்பில் சென்னை முகப்பேர் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடத்தியதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முனைவர் ந.  அருள் பரிசுகளை வழங்கிய போது  இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய நிதி அமைச்சகத்தின் ஜி.எஸ்.டி. துறையின் சென்னை மண்டல கண்காணிப்பாளரும், குடியரசுத் தலைவர் விருது பெற்ற தேசிய கைப்பந்துவிளையாட்டு வீரருமான சந்திரசேகரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

'முதலமைச்சர் கணினி தமிழ் விருது'க்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை, அக்.22 முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு நேற்று (21.10.2022) வெளியிட்ட அறிவிப்பு: தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்கு பவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக 'முதலமைச்சர் கணினித் தமிழ் விருது' என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது.   விருது பெறுபவருக்கு விருது தொகையாக ரூபாய் 2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. அவ்வகையில் 2021ஆம் ஆண்டுக்குரிய 'முதலமைச்சர் கணினித் தமிழ் விருது'க்கு மென்பொருள்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளது. மேலும் 2021ஆம் ஆண்டுக்கு கூடுதல் விண்ணப்பங்களும், 2022ஆம் ஆண்டுக்கு தனியர் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் விண்ணப் பங்களும் வரவேற்கப்படுகின்றன.

விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் 2018, 2019, 2020, 2021ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத் தளத்தில் (www.tamilvalarchithurai.com)  இலவச மாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விருதுக்கான விண்ணப்பம் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு வந்து சேர வேண்டிய இறுதி நாள் 31.12.2022 ஆகும். விண்ணப்பங்களை தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-600008. 044-28190412, 044-28190413 மற்றும் tvt.budget@gmail.com-க்கு அனுப்ப வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மழை நீடிக்கும்

சென்னை, அக்.22   அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேற்கு- வட மேற்கு பகுதியில் இன்று நகர்ந்து  மத்திய கிழக்கு மற்றும்  அதை ஒட்டிய தென் கிழக்கு  வங்கக் கடல் பகுதிக்கு வந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். பின்னர் நாளை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக  மேலும் வலுவடையும்.  பிறகு  வட திசையில் நகர்ந்து  மத்திய மேற்கு  மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு  வங்கக் கடல் பகுதியில் 24ஆம் தேதி புயலாக மாறும்.  அதற்கு பிறகு, 25ஆம் தேதி மேற்கு வங்கம் மற்றும் வங்க தேச கடற்கரை நோக்கி நகரும்.இந்த நிகழ்வின் காரணமாக    கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

உறுப்பு கல்லூரிகள் 27  

அரசுக் கல்லூரிகளாக மாற்றம் 

சென்னை, அக்.22 பல்வேறு பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கி வந்த 27 உறுப்புக் கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்வதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இது குறித்து நேற்று (2.10.2022) வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பல்வேறு பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கி வந்த 27 உறுப்புக் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்படுகிறது. 27 கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு அக்டோபர் 2022ஆம் மாதத்திற்கான ஊதியம் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலங்கள் வாயிலாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும், கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ள உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றிய இணைப் பேராசிரி யர்கள் 27 பேருக்கு முதல்வராக பதவி உயர்வு அளிக்கப் படுகிறது. 27 அரசு கலைக்கல்லூரிகளிலும் உள்ள பணியா ளர்கள் ஊதியத்தை அரசு கருவூலத்தில் இருந்து பெற்று வழங்க வேண்டும். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள இணைப்பேராசிரியர்கள் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட கல்லூரியில் பணியில் சேர வேண்டும். பணியில் சேர்ந்தவுடன் அந்தந்த மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரை நேரில் சந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் பெற்று அதன் படி செயல்பட வேண்டும். அதேபோல், கல்லூரி முழுமை யான அரசு கல்லூரியாக செயல்படுவதற்கு தேவையான அனைத்து  நடவடிக்கையும் மிகுந்த பொறுப்புணர்வோடு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment