திருவனந்தபுரம், அக்.23 கேரளா மாநிலம் வைக்கம் நகராட்சியில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினை வகத்தில் தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இவாய்வின்போது திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வழக்குரைஞர் கனகசபாபதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ. செந்தில் அண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நினைவகத்தினை ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்த தாவது.
தந்தை பெரியார் சமூக நீதி காக்க போராடிப் பெற்ற வெற்றியை நினைவு கூரும் வகையில், தந்தை பெரியாருக்கு வைக்கத்தில் நினைவுச் சின்னம் அமைக்கும் வகையில் பெரியார் நினைவகம் வைக்கத்தில் அமைந் துள்ளது. இந்நினைவகமானது 31,075 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் தந்தை பெரியார் அமர்ந்துள்ள நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ள 4 அடி உயர சிலை, அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் பொது மக்களின் பார்வைக்காக நிரந்தர ஒளிப்படக் கண்காட்சி அரங்கம், பெரியாரின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள் மற்றும் செய்தித் தாள்கள் அடங்கிய நூலகம், சிறுவர்கள் விளையாடி மகிழ விளையாட்டு சாதனங்கள் மற்றும் புல்வெளியுடன் கூடிய சிறுவர் பூங்கா உள்ளிட்டவையுடன் அமையப்பெற்றுள்ளது.
தந்தை பெரியார் நினைவகமானது சுமார் 28 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டதாகும். இந்த நினைவகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ஒளிப்படங்கள் அடங்கிய நிரந்தர ஒளிப்படக் கண்காட்சிக்கூடம், பார்வையாளர் மாடம் மற்றும் சிறுவர் பூங்கா ஆகியவற்றினை புனரமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார் அதனடிப்படையில், இந்நினைவகத்தில் ஆய்வு மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவுள்ளது என செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்தார்.


No comments:
Post a Comment