குறும்படப் போட்டி விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 5, 2023

குறும்படப் போட்டி விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி

 ஜாதியை ஒழிக்க; சமூகநீதிக் கொடி தலைதாழாமல் பறக்க; 

மனிதம் தழைக்க; திரைப்படக் கலையை கருவியாக்குங்கள்!

சென்னை. ஜன.5, பகுத்தறிவு கலைத்துறை சார்பில் குறும்படப் போட்டி 26.12.2022 அன்று நடைபெற்றது. அதில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

குறும்படப்போட்டி - 2022

தமிழர் தலைவரின் 90 ஆம் ஆண்டு அகவையை முன்னிட்டு பகுத்தறிவு கலைத்துறை மற்றும் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 2022 க்கான குறும்படப்போட்டி அறிவிக்கப்பட் டிருந்தது. போட்டியில் 21 குறும்படங்கள் கலந்து கொண்டன. இதில் 13 படங்கள் திரையிடத் தேர்வு செய்யப்பட்டு, 26-12-2022 அன்று பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் பிற்பகல் 2 மணியிலிருந்து 6 மணி வரை திரையிடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறும்படங்களை தேர்வு செய்வ தற்காக திரைப்பட இயக்குநர்கள் அஜயன் பாலா, மாரி கருணாநிதி, பாலு.மணிவண்ணன் ஆகியோர் நடுவர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். குறும்படங்களை அனுப்பியிருந்த படைப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திரையிடலும், தேர்வும்!

மாரி கருணாநிதி, இரா. தமிழ்செல்வன் ஆகியோர் படைப்பா ளர்களிடையே நிகழ்ச்சியை அறிமுகப்படுத்திப் பேசினர். படைப்பளர்களின் அறிமுகத்தோடு,13 குறும்படங்கள் திரையிடப்பட்டது. நடுவர்கள் மூவரும் தனித்தனியாகவும், ஒருங்கி ணைந்தும் முறையே ”தசரா”, தோணியை மூழ்கடித்த துடுப் புகள்”, ”முன்னோர்” என முதல் மூன்று பரிசுக்குரிய குறும்படங் களையும், சிறப்புத் தேர்வாக ’மானுட விடுதலை”, ”பிங்க் அலர்ட்”, “மேல் ஜாதி”, “ஆப்பிள்”, “ஒரே வார்த்தை”, ”மனித தர்மங்கள்”, “கொற்றவை” என ஏழு குறும்படங்கள் என மொத்தம் 10 குறும்படங்களைத் தேர்வு செய்தனர். இந்நிகழ்வை பகுத்தறிவாளர் கழக மாநிலத்தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் வெங்கடேசன், பகுத்தறிவு  கலைத்துறை மாநிலச் செயலாளர் மாரி. கருணாநிதி, மாநில குறும்பட அமைப் பாளர் உடுமலை வடிவேல், பெரியார் வலைக்காட்சி அருள் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

தமிழர் தலைவர் முதல் மூன்று 

குறும்படங்களை பார்வையிட்டார்!

மாலை 6 மணிக்கு மேல் ’பகுத்தறிவு கலைத்துறை’ மற்றும் ’புதுமை இலக்கியத் தென்றல்’ இரண்டு அமைப்புகளும் இணைந்து குறும்படப் போட்டி பரிசளிப்பு விழாவோடு புத்தக வெளியீட்டையும் இணைத்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத் திருந்தன. போட்டியில் தேர்வான குறும்படங்களுக்கு பரிசளித்து பாராட் டுரை வழங்க சிறப்பு அழைப்பாளராக தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வருகை தந்த பின், அவரது முன்னிலையில் முதல் மூன்று பரிசு பெற்ற குறும்படங்களும் திரையிடப்பட்டன. அதைத் தொடர்ந்து முறைப்படி பரிசளிப்பு விழா தொடங்கியது. 

10 குறும்படங்களுக்கு பரிசும்! பாராட்டும்!

கவிஞர் சுப.முருகானந்தம் அனைவரையும் வரவேற்று பேசினார். இரா. தமிழ்ச்செல்வன் தலைமையேற்று உரை யாற்றினார். 

மாரி. கருணாநிதி சிறப்பு அழைப்பாளரான தமிழர் தலைவரின் 90 ஆம் ஆண்டு அகவையின் தொடக்கத்தை சுட்டும் வகையில், வாழ்த்துக் கவிதை வாசித்தார். தொடர்ந்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் ஆடையணிவித்து மரியாதை செய்தார். அதைத் தொடர்ந்து “கவிஞர் சுப.முருகானந்தம் எழுதிய ”பெரியார் அந்தாதி”, “பெரியார் பாவை எட்டுப்பகுதி” எனும் விருத்தப் பா வடிவிலான இரண்டு கவிதை நூல்களை தமிழர் தலைவர் வெளியிட, கவிக்கோ துரை. வசந்தராசன் பெற்றுக்கொண்டார். 200 ரூபாய் மதிப்புள்ள இரண்டு நூல்களும் 150 ரூபாயில் கிடைக்கும் என்று மேடையில் அறிவிக்கப்பட்டது. பலரும் ஆவலுடன் ஆசிரியர் கைகளால் பெறும் வாய்ப்பைத் தவற விடாமல் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக “தசரா” எனும் குறும்படத்திற்கு ரூபாய் 5,000/- மற்றும் நினைவுப்பரிசும், சான்றிதழும், இரண்டாம் பரிசாக ”தோணியை மூழ்கடித்த துடுப்புகள்” எனும் குறும்படத்திற்கு ரூபாய் 3,000/- மற்றும் நினைவுப்பரிசும், சான்றிதழும், மூன்றாம் பரிசாக, “முன்னோர்” எனும் குறும்படத்திற்கு ரூபாய் 2,000/-மற்றும் நினைவு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறப்புப் பரிசு பெறும் ஏழு குறும்படங்களுக்கு நினைவு பரிசும், சான்றிதழ்களும் தமிழர் தலைவரால் வழங்கப்பட்டன.

காட்சிப்படுத்துவதில்தான் 

கலையின் வீரியம் இருக்கிறது!

இறுதியாக குறும்படங்களின் தன்மையைக் கண்டுணர்ந்த தால் மிகுந்த உற்சாகத்துடன் தமிழர் தலைவர் பேசினார். முதலில் நடுவர்களை தனித்தனியே பெயர்களைக் குறிப்பிட்டுப் பாராட்டினார். தொடர்ந்து படைப்பாளர்களையும் வெகுவாகப் பாராட்டினார். குறிப்பாக மூன்றாம் பரிசு பெற்ற ”முன்னோர்” குறும்படத்தின் இயக்குநர், மேல்நிலைப் பள்ளி மாணவன் என்பதை அறிந்து, ”நாற்றுகளே அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன” என்று சுவையான உவமையைச் சொல்லி அவரைப் பாராட்டினார். ”காட்சிப்படுத்துவதில்தான் படைப்புகள் வெற்றியடைகின்றன”: என்பதைச் சொல்லி, அதற்கு எடுத்துக் காட்டாக, ஒரு உண்மைச் சம்பவத்தைக் குறிப்பிட்டார். அதாவது, ஒரு வீட்டில் கடவுளர் படங்களுக்கு மாலை போடப்பட்டிருக் கின்றது. அதற்கு பக்கத்தில் உயிருள்ளவர்களின் படங்கள் மாலையிடப்படாமல் இருக்கின்றன. இதைப்பார்த்த ஒரு குழந்தை, ”ஏன் மனிதர்களுக்கு மாலை போடவில்லை?” என்று கேட்கிறது! ”செத்துப்போனவர்களுக்குதான் மாலை போடு வார்கள்” என்று பெரியவர்கள் பதில் சொல்லியிருக்கின்றனர். ”கடவுளுக்கு மாலை போடப்பட்டிருக்கிறதே, அப்படியென்றால், கடவுள் செத்துப் போய்விட்டதா?” என்று குழந்தை கேட்கிறது. பெரியவர்களிடம் பதிலில்லை என்பதைச் சொன்னார். பார்வையாளர்கள் அனிச்சையாக கைகளை தட்டினர். அதைக்கண்டு, ”இதுதான் காட்சிப்படுத்துதலின் வீரியம்” என்றார். அதற்கும் கைதட்டல்தான். அத்தோடு அறிஞர் அண்ணா முதலாளியாகவும், ஆருத்ரா தரிசனத்திற்குச் சென்று வந்த வீராசாமி எனும் தொழிலாளி நடித்த நாடகத்தையும் நினைவுபடுத்தி, வாய்விட்டு சிரிக்கவும், சிந்திக்கவும் செய்தார். 

மனிதம் தழைக்க கலையை கருவியாக்குங்கள்!

”தன்னுடைய பிறந்தநாளை தவிர்த்துவிட்டு, தந்தை பெரியார், அன்னை நாகம்மையார்., அன்னை மணியம்மையார், பட்டுக்கோட்டை அழகிரி போன்றவர்களின் பிறந்தநாள்களை முன்னிட்டு ”நன்கொடைகள் மூலம் ஆண்டுக்கு மூன்று முறை கூட குறும்படப்போட்டியை நடத்துங்கள்”  என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார். ’இதற்கென்று ஒரு பயிற்சிப் பட்டறை நடத்துவேன்’ என்று இயக்குநர் அஜயன் பாலா குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி, ”ஆக்கபூர்வாமான ஆலோசனை” என்று அதைப் பாராட்டினார். ”அதற்கென்று திராவிடர் கழகம் உறுதுணையாக இருக்கும்” என்றும் பலத்த கையொலிகளுக்கிடையே கூறினார். மேலும், ”ஜாதி ஒழியவும், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவும், சமூகநீதிக் கொடி தலை தாழாமல் பறக்கவும், இதன் காரணமாக மனிதம் தழைக்கவும், கலையை ஒரு கருவியாக்குங்கள்” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே படைப்பாளர்களிடம் வேண்டுகோள் வைத்து, தனது உரையை நிறைவு செய்தார். அதைத் தொடர்ந்து முதல் மூன்று பரிசுகள் பெற்றவர்களும், ஏழு சிறப்பு பரிசுகள் பெற்றவர்களும் தனித்தனியே தமிழர் தலைவருடன் குழு ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டனர். இறுதியாக பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.

பங்கேற்றுச் சிறப்பித்த தோழர்கள்!

நிகழ்வில் திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக துணைப்பொதுச்செயலாளர் இளவரசி சங்கர், கவிஞர் முருகுபாண்டியன், நற்றமிழ் கவிஞர் ந. பாபு, பேராசிரியர் தமிழியலன், அரும்பாக்கம் தாமோதரன், அயனாவரம் துரை ராஜ், திராவிடர் கழக பூவைப் பகுதித் தலைவர் தமிழ்செல்வன், ஆவடி பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் முருகேசன், மாநில இளைஞரணிப் பொறுப்பாளர் சோ. சுரேஷ், தோழர் வஜ்ரவேல்  உள்ளிட்ட குறும்பட படைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


No comments:

Post a Comment